தேசத்துக்கு நிழல் மர நடுகை மட்டக்களப்பு மாவட்ட பிரதான நிகழ்வு காத்தான்குடியில்

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் தயட்ட செவன எனப்படும் தேசத்துக்கு நிழல் மர நடுகை நிகழ்ச்சித்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான வைபவம் இன்று சனிக்கிழமை (15) காலை காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் நடைபெற்றது.


இதன்போது பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் முதலாவது மரத்தினை நாட்டி ஆரம்பித்து வைத்தார்.

சுற்றாடல் மற்றும் புனருத்தான சக்தி அமைச்சு மற்றும் வன பரிபாலன திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இம்மரநடுகை வைபவத்தில், வன பரிபாலன திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட வன அதிகாரி டி.பி.பிரசாந்த மற்றும் வன பரிபாலன திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட வன உதவி அதிகாரி எம்.ஏ.நபீஸ், காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில், காத்தான்குடி மத்திய கல்லூரி அதிபர் எம்.ஏ.முபாறக், காத்தான்குடி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஐ.கே.ஜீ.இகலவெல, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எல்.வெதகெதர, பொதுமக்கள் தொடர்புப்பிரிவு பொறுப்பதிகாரி சப் இக்ங்ஸ்பெக்ரர் லக்ஸ்மன் வீரசிங்க, வன பரிபாலன திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பசுமை நிறைந்த நாடு ஒளிமையான எதிர்காலம் எனும் தேசிய மர நடுகை நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக வனப்பரப்பை அதிகரிப்பதற்கான இலக்கினை வெற்றி கொள்வோம் எனும் தொனிப் பொருளில் இந்த தேசிய மர நடுகை திட்டம் நடைபெற்றது.

இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 12,000 காட்டு மரம், பூ மரங்கள் இன்று நடப்படுவதாக வன பரிபாலன திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட வன உதவி அதிகாரி எம்.ஏ.நபீஸ் தெரிவித்தார்.