கூழாவடியில் மதுபானசாலை உரிமையாளர் கிராம சேவையாளர் மீது தாக்குதல் -பணி புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

(லியோன்)   

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் கிராம சேவையாளர் ஒருவர் மதுபானசாலை உரிமையாளரினால் தாக்கப்பட்டமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் தொடர்ச்சியான பணி புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றும் கிராம சேவையாளர்கள் அறிவித்துள்ளனர்.
                                                                                                                                                             
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் சேவையாற்றும் கிராம சேவையாளர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பாக கிராம சேவை உத்தியோகத்தர்களினால் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் மாவட்ட அரசாங்க அதிபருக்கு  கையளிக்குமாறு நேற்று வியாழக்கிழமை பிற்பகல் மண்முனை வடக்கு பிரதேச உதவி பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

இது தொடர்பில் தெரியவருவதாவது ,

முண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட தாண்டவன்வெளி கிராம சேவையாளர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் தனது மேலதிக கல்வி நடவடிக்கைக்காக" மதுபாவனையால் ஏற்படும் சமூக,உளவியல் பிரச்சினை" எனும் விடயம் தொடர்பில் கூழாவடியில் உள்ள மதுபானசாலையை புகைப்படம் எடுப்பதற்காக சென்று தான் ஒரு கிராம உத்தியோகத்தரெனவும் தனது மேற்படி கல்வி நடவடிக்கைக்கான ஒப்படைக்காக தங்களது மதுபானசாலையை புகைப்படம் எடுப்பதற்கு அனுமதிக்குமாறு கேட்கப்பட்ட போது அவரால் அனுமதி வழங்கப்பட்ட பின் புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும், அன்றைய தினம் பிற்பகல் குறித்த கிராம உத்தியோகத்தரை மதுபானசாலை உரிமையாளர் தனது இல்லம் வருமாறு அழைத்தபோது அவர் செல்லாத காரணத்தால் அதே தினம் கடமை நிமித்தம் அவ்வழியால் சென்ற கிராம உத்தியோகத்தரை மதுபானசாலை ஊழியர் வழிமறித்து மதுபானசாலை உரிமையாளரின் வீட்டுக்கு அழைத்து சென்று குறித்த உத்தியோகத்தரை தாக்கியதோடு அச்சுறுத்தபட்டதாகவும் கிராம சேவையாளர்கள் தெரிவித்தனர்.

தாக்கப்பட்ட உத்தியோகத்தர் புதிதாக சேவையில் இணைக்கப்பட்டவர் எனவும் , குறித்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போதிலும் இவ்விடயம் தொடர்பில் எதுவித பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் , இனிவருங்காலங்களில் கிராம உத்தியோகத்தர்கள் தங்கள் பிரிவில் அச்சமின்றி வெளிக்கள கடமையில் ஈடுபடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை  மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்கள் அனைவரும் பணி புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாகவும் மண்முனை வடக்கு பிரதேச கிராம சேவகர் அலுவலக பிரிவினால் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக தமது கோரிக்கை அடங்கிய மகஜரை  மாவட்ட செயலாளருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.  

கிராம சேவையாளர்களின் பணி புறக்கணிப்பால் தமது தேவைகள் நிமித்தம் கிராம சேவையாளரை சந்திக்க வருகை தந்த பொது மக்கள் நேற்றைய தினம் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டது .

குறித்த விடயம் தொடர்பாக எதிர்வரும்  16.11.2014 திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.