(லியோன்)
கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகமும் கிழக்கு மாகாண முதலமைச்சு மற்றும் உள்ளுராட்சி கிராமிய அபிவிருத்தி,சுற்றாடல் அமைச்சும் இணைந்து நடத்திய மாபெரும் மாகாண சிறுவர் தின நிகழ்வு இன்று மட்டக்களப்பு கல்லடியில் சிறப்பாக நடைபெற்றது.
கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மன்சூர் சிறப்பு அதிதியாகவும் முதலமைச்சரின் செயலாளர் அசீஸ் உட்பட அதிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள பாலர் பாடசாலைகளின் மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் சுமார் 1500 மாணவர்கள் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் பிரதம அதிதிகள் பாலர் பாடசாலையின் மாணவர்களினால் பேண்;ட் வாத்தியம் இசைக்கப்பட்டு அழைத்துவரப்பட்டனர்.
இதன்போது 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பேண்ட் வாத்திய கருவிகளை இசைத்து அதிதிகளை வரவேற்றனர்.
இதன்போது மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்வுகள் பார்ப்போரை வெகுவாக ஈர்த்ததுடன் மும்மொழி மாணவர்களினதும் கலை நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் மூன்று மாவட்டங்களிலும் உள்ள பாலர் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கிவைக்கப்பட்டன.
இதேநேரம் குறித்த நிகழ்வு காலை 9.30க்கும் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இதில் கலந்துகொண்ட அரசியல்வாதிகள் முற்பகல் 11.30க்கே நிகழ்வுக்கு வருகைதந்தனர்.
இதன் காரணமாக கலந்துகொண்ட சிறுவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.