அடையாள பணி பகிஸ்கரிப்பு பேச்சுவார்த்தையினையடுத்து கைவிடப்பட்டது

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அரச தாதிய உத்தியோகத்தர் சங்கம் இன்று புதன்கிழமை (08) மேற்கொள்ளவிருந்த அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கு.ஜெகநீதன் தெரிவித்தார்.


இன்று புதன்கிழமை காலை முதல் அரச தாதிய உத்தியோகத்தர் சங்கம்,பொதுச்சேவை ஐக்கிய தாதிமார் சங்கம் ஆகியன இணைந்து மேற்கொள்ளவிருந்த அடையாள பணி பகிஸ்கரிப்பு போராட்டமே கைவிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரினால் தாதியர்களின் கடமை நேரக் குறைப்பு சம்பந்தமாக வழங்கப்பட்ட அறிவுறுத்தல் தொடர்பாக, அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நடத்துவதற்கு ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரினால் தாதியர்களின் கடமை நேரக் குறைப்பு மற்றும் வைத்தியசாலையில் தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக உரிய தீர்வை  பெற்றுக்கொள்வதற்காக அரச தாதிய உத்தியோகஸ்;தர் சங்கம்,பொதுச்சேவை ஐக்கிய தாதிமார் சங்கம் ஆகியவற்றுக்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ்.இப்றாலெப்பைக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை (07)  பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதன்போது,  இணக்கங்கள் எட்டப்பட்டதன் அடிப்படையில் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பணிப்பாளர்,வைத்திய கலாநிதி எம்.எஸ்.இப்றாலெப்பையால் தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகள் எழுத்து மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக தமது அடையாள பணி பகிஸ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தாதிய உத்தியோகஸ்தர்களின் தினவரவுப் பதிவேடு மீண்டும் தாதிய தலைமைப் பரிபாலகியின் பராமரிப்பின் கீழ் கொண்டுவரப்படுதல், மேலதிக நேரக் கொடுப்பனவு கவனத்தில் கொள்ளப்படும், வைத்தியசாலையில் தாதியர் வாசிகசாலை ஒழுங்கு செய்து தரப்படும், தேவைக்கேற்ப தாதிய உத்தியோகஸ்தர்கள் தங்களது வார விடுமுறை மற்றும் விடுமுறை தினங்களில் கடமையில் ஈடுபட முடியும் ,ஒவ்வொரு நோயாளர் விடுதியிலும் இனிமேல் இரவுக் கடமைகளில் இரண்டு தாதிய உத்தியோகஸ்;தர்களை  நியமிக்க இணக்கம். வைத்தியசாலையின் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு,வைத்தியசாலை நலன் தொடர்பான கூட்டங்களில் தமது
பிரதிநிதிகளும் பங்குபற்றும் வாய்ப்பு, வெளியிடங்களிலிருந்து வந்து மட்டக்களப்பில் தங்கியிருந்து பணிபுரியும் ஆண் தாதிய உத்தியோகஸ்தர்களுக்காக விடுதியொன்றை ஏற்பாடு செய்து கொடுத்தல்

உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில்; வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ்.இப்றாலெப்பையிடமிருந்து தாம் எழுத்து மூலமான உத்தரவாதத்தை பெற்றுள்ளதாகவும் அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கு.ஜெகநீதன் தெரிவித்தார்.