மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையிலுள்ள மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்ட காணிகளில் அத்து மீறி குடியேறியுள்ளவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த சட்ட ரீதியான நடவடிக்கைகள் வேண்டும் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் என்று தெரிவித்தார்.
தன்னிடம் மேய்ச்சல் தரை பண்ணையாளர்கள் முறையிட்டதற்கு அமைய நேரடியான கள விஜயங்களை தான் மேற்கொண்டதாகவும், அங்கு நடைபெறுகின்ற அனைத்து அத்துமீறிய செயற்பாடுகளும் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாவட்டத்தின் எல்லைப்பிரதேசங்களான, மணல் ஏத்தம், வெட்டிப்போட்ட சேனை, மயிலத்த மடு, மாதவணை, கறுவாச்சோலை, மாந்திரிஆறு, வடமுனை, ஓமடியாமடு பிரதேசங்களை சில தினங்களாக பார்வையிட்டேன்.
குறிப்பாக செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாதவணை, மாந்திரிஆறு, பகுதியிலுள்ள கந்தகம எல்லைக்கிராமத்தில் சுமார் 60 குடும்பங்களைச் சேர்ந்த அம்பாறை பொலநறுவை மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பான்மை இனக் குடும்பங்கள் தற்காலிக கொட்டில்களில் தங்கியுள்ளனர்.
இவர்கள் மேய்ச்சல் தரைக்காணிகளில் உழவு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். காடுகளை அழித்தல், பயறு போன்ற பயிர்களை விதைத்தல், மேய்ச்சலுக்குச் செல்லும் மாடுகளைக் கட்டுதல், சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபடுதல், அனுமதியில்லா துப்பாக்கிகளை வைத்திருத்தல் போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
மேற்கொண்ட நேரடி விஜயங்களில், இருந்து இவர்களுக்கு எதிராக எந்தவிதமான சட்ட ரீதியான எதிர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரிகிறது. எனவே இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியவர்கள் எந்த வித நடவடிககைகளையும் எடுக்காது இருப்பதானது பாரபட்சமானசெயற்பாடாக இருக்கும் என்றுமு; அவர் மேலும் தெரிவித்தார்.