ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் (EU SEM) அக்ரட் நிறுவனத்தினால் மட்டக்களப்பு - திருமலை மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான திட்டத்தின் ஒரு அங்கமாக இன்றைய தினம் சிறிய நடுத்தர முயற்சியாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமூக உந்துதல் அபிவிருத்தித்திட்டம் மற்றும் வறியோர் ஆதரவு பொருளாதார அபிவிருத்தித்திட்டம் ஆகியன நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென்மேற்கு- பட்டிப்பளை, போரதீவு பற்று- வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.
இன்றையதினம் நடைபெற்ற சிறிய நடுத்தர முயற்சியாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்குமிடையிலான சந்திப்புக் கலந்துரையாடலில், பிரதம அதிதியாகவும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதாகரன், பட்டிப்பளை சகாதார வைத்திய அதிகாரி இ.சிறிநாத், அக்ரட்டின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் தாஜுல் ப்பலா, மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் உத்தியோகத்தர் எஸ்.கௌசல்யா, கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எஸ்.குகதாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அக்ரட்டின், நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் எம்.சுதர்சணன், சிறிய மற்றும் நடுத்தர தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர் இ.கஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இச் சந்திப்புக் கலந்துரையாடலில் 11 சிறய நடுத்தர முயற்சியாளர்களும், 20க்கும் மேற்பட்ட விற்பனை மற்றும் கொள்வனவாளர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது, சிறிய நடுத்தர முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருளகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததுடன், அவர்களுடைய பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றதுடன், விற்பனையாளர்களுக்குமிடையிலான தொடர்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.