மாணவர்களின் வினைத்திறமைக்கு கல்குடா வலயம் ஊக்கமளிக்க தவறியுள்ளது -இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

(பேரின்பராஜா சபேஷ்)

தேசிய மட்டத்தில் நடைபெறும் இளம் கண்டுபிடிப்பாளர்கள் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட ரீதியில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் வினைத்திறன் மிக்க செயற்பாட்டிற்கு கல்குடா கல்வி வலயம் ஊக்கமளிக்கத்தவறியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
பாடசலை மாணவர்களுக்கிடையிலான புதிய கண்டுபிடிப்பாளர்கள் தேசிய ரீதியிலான போட்டிக்கு கல்குடா கல்வி வலயத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தொடர்பாக கல்வி வலயம் கவலையீனத்துடன் செயற்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தி  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை செயலாளர் பொ.உதயரூபன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.                       

எமது நாட்டில் தேசிய ரீதியில் பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் பாடசலை மாணவர்களுக்கிடையிலான புதிய கண்டுபிடிப்பாளர்கள் (புத்தாக்குனர்) போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலயத்திலிருந்து செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பாடசாலைகளின் மாணவர்கள் காட்டிய வினைத்திறன்மிக்க கண்டுபிடிப்பிப்புகள் தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

கல்குடா கல்வி வலயத்தில் செங்கலடி மத்திய கல்லூரி மற்றும் செங்கலடி விவேகானந்தா தமிழ் பாடசாலை ஆகியவற்றிலிருந்து தலா ஒவ்வொரு இளம் கண்டுபிடிப்பாளர்கள் தேசிய மட்ட பத்தாக்குனர் போட்டிக்குத் தொரிவு செய்யப்பட்டிருந்தனர்.

பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஐந்து தினங்கள் நடைபெறும் இவ புத்தாக்குனர் போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள மாணவர்களின் ஆக்கத்திறன் மீது கல்குடா கல்வி வலயம் எதுவித அக்கறையும் காட்டவில்லை.

குறித்த பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்வதாயின் பொறுப்பான ஆசிரியர்கள் தமது சொந்த விடுமுiயில் செல்லவேண்டும் என கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் (நிருவாகம்) கூறியதாகவும் மாணவர்களின் செலவு தொடர்பாக எவ்வித அக்கறையின்றி இருந்ததோடு இந்த விடயம் தொடர்பாக பொறுப்புக்கூறலிலிருந்து நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளர் தவிர்த்துக் கொண்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் இலங்கை ஆசிரியர் சங்க மட்டக்களப்புக் கிளை செயலாளர் என்ற ரீதியில் தொடர்பு கொண்டு மாணவர்கள் தமது பெற்றோர் மற்றும் உறவினர் சகிதம் பெரும் சிரமத்துக்கு மத்தியில் தமது கண்டுபிடிப்புக்களை தேசிய மட்ட போட்டிக்கு கொண்டு சென்றுள்ளார்கள் என்ற செய்தியை தெரிவித்ததன் பின்பு குறித்த பாடசாலைகளின் ஆசிரியர்கள் அவசரமாக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மாணவர்கள ஐந்து நாட்கள் கொழும்பில் தங்குவதற்கு பாடசாலையிலிருந்து சேகரிக்கப்பட்ட சிறிதளவு பணம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. கல்குடா கல்வி வலயத்திலிருந்து இது தொடர்பாக எவ்வித நிதியுதவியும் வழங்கப்படவில்லை.

கிழக்கு மாகாணத்திற்கும், கல்குடா கல்வி வலயத்திற்கு பெரும் புகழைப் பெற்றுத் தரக்கூடிய இளம் மாணவர்களின் கண்டுபிடிப்புத் தொடர்பாக வினைத்திறன் மிக்க செயற்பாட்டிற்கு கல்குடா கல்வி வலயம் ஊக்கமளிக்காததை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் தமது கவலை வெளியிட்டுள்ளது. என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.