நடமாடும் நாச்சியார் பாரம்பரிய உணவகம் காந்தி சதுக்கத்தில் ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்ட பெண் தொழில் முயற்சியாளர்களின் ஒரு புதிய முயற்சியாக நடமாடும் நாச்சியார் பாரம்பரிய உணவகம் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸால் திறந்து வைக்கப்பட்டது.

இவ் நிலையம் இரவு நேரங்களில் செயற்படும் வண்ணம் இயங்கவுள்ளது.
இந் நிகழ்வில், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கே.சிவப்பிரகாசம், மட்டக்களப்பு மாவட்ட கைத்தொழில் விவசாய வர்த்தக சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எஸ்.குகதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நடமாடும் பாரம்பரிய உணவகம் தொடர்பில் கருத்து தெரிவித்த, காவியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் தலைவி திருமதி ஜோதிமலர் அஜித் குமார் மட்டக்களப்பின் பாரம்பரிய உணவுகளை விற்பனை செய்யும் வகையிலும், பெண் தொழில் முயற்சியாளர்களின் வருமானத்தினை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த நடமாடும் உணவகம் திறந்து வைக்கப்படுகிறது.

ஏற்கனவே காவியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் முயற்சியால் பாரம்பரிய உணவகம் மட்டக்களப்பு நகரின் புகையிரத நிலைய வீதியில் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் கைவினைப் பொருள்களின் விற்பனைக்கென புதுவாழ்வு மகளிர் விற்பனை நிலையம் லொயிட்ஸ் அவனியூவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்கள் மூலம் பெண்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்து வேண்டும் என்பதே எமது நிலையத்தின் நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.