உயர் கல்வி அமைச்சின் 720 மில்லியன் நிதி ஒகுக்கீட்டில் மட்டக்களப்பு ஆரையம்பதியில் நிர்மாணிக்கப்படும் இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவகத்தின் மாடிக் கட்டிடம் முடிவுறும் நிலைக்கு வந்துள்ளது.
ஜனவரி மாதம் முதல் உயர் தேசிய கணக்கீட்டு டிப்ளோமா மற்றும் உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா துறை சார் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படவுள்ளது என நிறுவகத்தின் கல்விசார் இணைப்பாளர் எஸ். ஜெயபாலன் தெரிவித்தார்.
இந்நிறுவகத்தில் உயர் தேசிய கணக்கீட்டு டிப்ளோமா மற்றும் உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா துறைகளில் முழுநேரமாக 250 மாணவர்களும் மற்றும் பகுதி நேரப் பிரிவில் 200 மாணவர்களும் கல்வி கற்கின்றனர். ஜனவரி முதல் முழுநேரப் பிரிவில் 400 மாணவர்களை உள்வாங்க முடியும் மற்றும் சித்தி பெறும் மாணவர்கள் 100 வீதமானவர்கள் வேலைக்கமர்த்தப் படுகின்றனர் என மேலும் தெரிவித்தார்.
புதிய கட்டிடத்தில் நிருவாக பிரிவு, விரிவுரையாளர் மண்டபம், ஒன்று கூடல் மண்டபம், கணனி பிரிவு மற்றும் சிற்றூண்டிச்சாலை என்பன அடங்குகின்றன.
மாற்று வழி உயர் கல்வித்திட்டத்தின் கீழ் எல்லா உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவகத்தினையும் பல்கலைக்கழக மட்டத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ் பி. திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் தற்காலிக கட்டிடத்திலேயே கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இக்கட்டிட அடிக்கல் கடந்த வருடம் ஜூலை மாதம் 2 ஆம் திகதி உயர் கல்வி அமைச்சரால் நாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

.jpg)
.jpg)
.jpg)