மேய்ச்சல்தரை பிரச்சினை ஆராய்வில் மட்டு.பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படாமை: செல்வராசா எம்.பி.கண்டனம்

கிழக்கு மாகாணத்தில் நிலவிவரும் மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் திருகோணமலையில் நடைபெற்ற உயர் மட்ட கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்காமை தொடர்பில் சுற்றாடல்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் சுற்றாடல்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவை சந்தித்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா இந்த கண்டனத்தினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா,

முட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலகமாக பெரும் பிரச்சினையாக மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினை பிரஸ்தாபிக்கப்பட்டுவருகின்றது.இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் பாராளுமன்றத்திலும் பல்வேறு தடவைகள் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஆத்துடன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் உட்பட பல கவன ஈர்ப்பு நடவடிக்கைகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டது.இது தொடர்பில் சிறந்த தீர்வினை வழங்கவேண்டும் என நாங்கள் தொடர்ச்சியாக கோரிவருகின்றோம்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் நிலவும் மேய்ச்சல் தரை தொடர்பிலான உயர்மட்டக்கூட்டம் திருகோணமலையில் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டமானது சுற்றாடல்துறை அமைச்சராகிய உங்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது.இந்த கூட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் இந்த கூட்டத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் வழங்கப்படவில்லை.இதனை நாங்கள் வன்மையாகக்கண்டிக்கின்றோம் என தெரிவித்தேன்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த,இந்த பொதுக்கூட்டம் கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஏற்பட்டிலேயே இடம்பெற்றதாகவும் இது தொடர்பில் அழைப்பு விடுக்காமை தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என தெரிவித்தார்.

ஆத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பில் ஆராயும் வகையில் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினை மட்டக்களப்புக்கு அனுப்பி அனைவரது கருத்தினையும் பெறுவதாக அமைச்சர் உறுதியளித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.