அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் அன்சார்பள்ளி வீதியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது நேற்றைய செய்யப்பட்டவருக்கு 25 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸார தெரிவித்தனர்.
ஒலுவில் அன்சார்பள்ளி வீதியைச் சேர்ந்த ஆதம்பாவா சகீலா உம்மா என்பவரது வீட்டில் யாரும் இல்லாத வெள்ளிக்கிழமை பகல் வேளை வீட்டின் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையிட்ட அப்பிரதேசத்தைச் சேர்ந்த 19வயது இளைஞனுக்கே அக்கரைப்பற்று நீதவான் இந்த உத்தரவைப்பிறப்பித்துள்ளார்.
இதன்போது, மோதிரம், பதக்கம், தங்கச்சங்கிலியுள்ளிட்ட 3 பவுண் நகையும், 15ஆயிரம் ரூபா பணமும் கொள்ளயிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விரைவாக விசாரணைகளை மேற்கொண்ட அக்கரைப்பற்றுப் பொலிஸார் குறித்த அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனைக் கைது செய்து நேற்றைய தினம் சனிக்கிழமை பகல் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
கடந்த வாரத்தில் நிந்தவூர் பிரதேசத்தில் அதிரடிப்படையினர் கொள்ளையில் ஈடுபட முயன்றதாக கூறி மக்களால் விசேட அதிரடிப்படையினர் பிடிக்கப்பட்டதும், அதன் பின்னர் அப்பிரதேசத்தில் வன்முறை வெடித்து இரண்டுக்கும் மேற்பட்ட நாட்கள் கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் மேற்கொள்ளப்படுவது தொடர்பில் கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி தலைமையில் அக்கரைப்பற்றில் கடந்த வாரத்தில் முஸ்லிம் மக்கள், அமைப்புப்பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கூட்டத்திலும் கருத்துகள் வெளியிடப்பட்டதுடன், கட்டளைத்தளபதியிடம் முறையிடப்பட்டிருந்ததாகவும் அறிய முடிகிறது.
இப்பிரதேசங்களில் நடைபெற்றுவரும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருவதுடன், கைது செய்யப்பட்டுள்ளவர் தொடர்பிலும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
