கறுவப்பங்கேணி சுடரொளி மாதர் சங்கத்தின் ஊக்குவிப்பு பரிசளிப்பு நிகழ்வு

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கறுவப்பங்கேணி சுடரொளி மாதர் சங்கத்தின் வருடாந்த ஊக்குவிப்பு பரிசளிப்பு விழா திங்கட்;கிழமை சிறப்பாக நடைபெற்றது.

சுடரொளி மாதர் சங்கத்தின் தலைவி சரோஜினிதேவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுகிர்தினி கிருஸ்ணா,லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ராம்பிரசாத் மற்றும் பிரதேச கிராம உத்தியோகத்தர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் சுடரொளி மாதர் சங்கத்தின் செயற்பாடுகளில் சிறந்த செயற்பாடுகளைக்கொண்ட 64 உறுப்பினர்கள் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சுடரொளி மாதர் சங்கத்தின் மூலம் பிரதேசத்தில் உள்ள வறுமை நிலையில் உள்ள பெண்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் பிரதேசத்தின் சமூக சேவை நடவடிக்கைகளில் கடந்த காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாக சங்கத்தின் தலைவி திருமதி சரோஜினிதேவி தெரிவித்தார்.

வறுமையொழிப்பு திட்டத்தின் கீழ் பிரதேசத்தில் 250க்கும் மேற்பட்டவர்களுக்கு வாழ்வாதாரா கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோன்று கடந்த காலத்தில் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டதாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.