திட்டமிட்டுச் செயற்படாவிடில் தமிழர்களாகிய நாம் தோற்கடிக்கப்படுவோம் -இரா.துரைரெட்னம்

தமிழர்களுக்கெதிராக பின்னிவிடப்படும் சதிவலைகளுக்கு நடவடிக்கைகளுக்கு எதிராக திட்டமிட்டுச் செயற்படாவிடில் தமிழர்களாகிய நாம் தோற்கடிக்கப்படுவோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா துரைரெட்ணம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு அலுவலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில் பொது மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே துரைரெட்ணம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கிழக்கு மாகாணத்    தமிழர்களுக்கு  எதிராக இனவாத ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்படும் அநீதிகளை உடன் தடுத்து நிறுத்த முன்னின்று உழைப்போம்.

இந்த வகையில் பாரம்பரிய தமிழ்ப்பிரதேசங்களில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவட்ட எல்லைகளான வெல்லாவெளி பட்டிப்பளை, வவுணதீவு,    செங்கலடி, கிரான், வாகரை  போன்ற பிரதேச செயலகப்பிரிவுகளில்  உள்ள எல்லைக் கிராமங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள்   மேற்;கொள்ளப்பட்டு  வருகின்றன.

இத்தகைய நடவடிக்கைகள் எதிர்காலத்தில் அம்மாவட்டத்தின் குடிப்பரம்பலைக் சிதைப்பதோடு நின்று விடாமல் திட்டமிட்ட அரசின் எல்லை மீள் நிர்ணயத்தின் மூலம் இனப்பரம்பலிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற ஐயப்பாட்டைத் தோற்றுவித்துள்ளது.

இதேவேளை, தற்போதைய ஆரையம்பதி காத்தான்குடி பிரதேசங்களிலும் காத்தான்குடிக்கும் மண்முனை வடக்குக்கும் இடையிலுள்ள நாவற்குடா, நொச்சிமுனை எல்லைக்கிராமங்களிலும் செங்கலடிப் பிரதேசப்பிரிவிலுள்ள ஐயங்கேணி, தளவாய், சவுக்கடி, மங்களகம, கிராம எல்லைகளிலும், கிரான் , ஓட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவுகளுக்கிடையிலுள்ள மீராவோடை கிராமமும்,  வாகரைப்பிரதேச செயலகப்பிரிவிலுள்ள புணானை, றிதிதென்ன ஜெயந்தியாய, போன்ற கிராமங்களில் உள்ள காணிப்பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் முஸ்லிம் உறவுகளில் முரண்பாடுகள் வலுவடைந்து கொண்டே செல்கின்றன.

இந் நடவடிக்கைகளிலும் ஆளும் அரசியல்பலம் செல்வாக்கு செலுத்துவதாக தமிழ்மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மாகாண அபிவிருத்தி நிதிஒதுக்கீடு, நியமனம் தொடர்பான விடயங்களிலும்  தமிழ் மக்கள் தொடர்ந்தும் கிழக்கு மாகாண ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான விடயங்களிலும்  கூட மத்திய அரசு ஒருபக்கச்சார்பான கொள்கைகளையே கடைபிடித்து வருகின்றது.

மேலும் 13ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம்  வழங்கப்பட்ட மாகாண சபைக்கான அதிகாரங்களை முறையாக அமுல்படுத்துவதில் மத்திய அரசு தயக்கம் காட்டியே வருகின்றது.

எனவே தமிழர்களாகிய நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றோம் என்ற ஐயப்பாடு தமிழ் மக்களிடையே எழுந்துள்ளது. இவ்விடயங்களை தீர்ப்பதற்கு பலமுயற்சிகள் முன்னெடுக்கப்பட்டும் ஆளுந்தரப்பிடமிருந்து தெளிவான முடிவுகள் முன்வைக்கப்படாமல் இராணுவத் தலையீடும் அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகளின் அழுத்தங்களும் இது தொடர்பான செயற்பாடுகளில் வேண்டுமென்றே பிரயோகிக்கப்படுகின்றன.

இவற்றை முறியடித்து இம்மாவட்டத்தில் தமிழர்களாகிய நாம் இனஐக்கியத்துடனும், நம்பிக்கையுடனும், பரஸ்பர புரிந்துணர்வுடனும் வாழ இம்மாவட்டத்திலும், தென்னிலங்கையிலும் சர்வதேசத்திலும் உள்ள தமிழர் நலன்சார்ந்த அமைப்புகளை ஓரணியில் திரண்டு உழைக்க முன்வரவேண்டும் கேட்டுக்கொள்கிறேன்.