மதகுருவை மாவட்டத்தில் இருந்து வெளியேற்றவேண்டுமென கோரிக்கை

உணர்ச்சிவசப்பட்டு பெண் அதிகாரியை தாக்க முற்பட்ட மதகுருவை கண்டிப்பதுடன், தொடர்ந்தும் இவ்வாறான வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடும் மதகுருவை மாவட்டத்திலிருந்து வெளியேற்றவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் மன்றம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பின் பட்டிப்பளை பிரதேச செயலகத்தினுள் இன்றைய தினம் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியான சுமணரத்ன தேரர் நடந்து கொண்ட முறை குறித்து மன்றத்தின் தலைவர் வ.கமலதாஸ் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் சகல இனங்கள் மத்தியில் அமைதியையும், நல்லுறவையும் கௌரவமான வாழ்வையும், நாட்டின்மீது நம்பிக்கையையும்  மேம்படுத்துவதற்காக எமது பிரசைகள் குழு மாவட்ட ரீதியாக  நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

எமது அமைப்பு ஒரு வலிந்து உதவும் தொண்டர் அமைப்பு என்பதால் ஊடகங்களின் உதவியுடன் எமது சமூகத்தில் காணப்படும் குறைபாடுகளை வெளிப்படுத்தி, அவற்றை பொறுப்புக் கூறவேண்டிய அதிகாரிகளின் தலையீட்டுடன் நிவர்த்திசெய்து வருகின்றோம். இந்த அடிப்படையில் கீழ்வரும் மக்களின் முறைப்பாடு ஒன்றை தங்களின் நடவடிக்கைக்காக முன்வைத்து தங்களால் இயன்ற பங்களிப்பைக் கட்டுக்கொள்கின்றேன்.
“பொதுமக்கள் தினமாகிய இன்று காலை, 2013.11.27 புதன்கிழமை, பல தூர கிராமத்து மக்களும் மண்முனை தென் மேற்கு, பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு தங்களது தேவைகளை நிறைவேற்ற அரச அதிகாரிகளை சந்திப்பதற்காக வந்திருந்தனர்.

இவ்வேளையில் ஒரு பௌத்த மதகுரு அவருடைய காரியாலயத்தினுள் புகுந்து ஆவேசமாக, கீழ்த்தரமான வார்த்தைகளால் அவரை தூஷித்து, காரியாலயத்தினுள் இருந்த அரச உடமைகளைத் தாக்கி, பயங்கரமானதும் கலவரமிக்கதுமான சூழ்நிலையை உருவாக்கினார் என்று பொது நிறுவனங்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்.

இது பெண்கள்பற்றியும் அரசாங்க காரியாலயங்கள் பற்றியும்  அம்மதகுரு கொண்டுள்ள இழிந்த மன நிலையை வெளிப்படுத்தியுள்ளது. பட்டிப்பளை பிரதேச செயலாளராகிய திருமதி சிவபிரியா வில்வரெட்ணம்  எவருடைய அழுத்தத்திற்கும் தலை வணங்காத, பக்கம் சாராத, அரசின் கொள்கைக்கும், சட்டத்திற்கும் மட்டுமே அடிபணிந்து நேர்மையாக கடமையாற்றும் இறுக்கமான ஒரு இளம்பெண் அதிகாரி என்பது அப்பகுதி மக்கள் அறிந்த விடயம். 
இந்த மதகுரு புனிதமான காவியுடையைப்   போர்த்திக்கொண்டு அதன் காவலர்களான பௌத்த, இந்து சமூகங்கள்  வெட்கித் தலை குனியக்கூடிய வகையில் அண்மைக்காலமாக நடந்துகொண்டு வருகின்றார். சிங்கள மக்களுக்கும்  தமிழ்மக்களுக்கும் இடையில் உருவாகிக் கொண்டுவரும் பரஸ்பர உறவையும், நம்பிக்கை, நல்லெண்ணம் ஆகியவற்றையும் சிதைத்துக் கொண்டு வரும் இந்த பண்பே தெரியாத மதப் பயங்கரவாதி நிச்சயமாக புனர் வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு சீர்திருத்தப்படவேண்டியவர்.

பௌத்த துறவிகளின் இலட்சணம் இதுதானா என்று வெளிநாட்டவர்கள் எண்ணத் தக்கவகையில் பௌத்த மதத்தை இழிவுபடுத்தி வருகின்றார். இவர் தனது சுதந்திரத்தை எல்லைமீறி பயன்படுத்துவதால்  அரசின் உதவியுடன்தான் இப்படி செயல்படுகின்றார் என்று மக்கள் சிந்திக்கும் நிலைக்கு அவர்களை ஆக்கியுள்ளார்.

இதனால் எமது பகுதியில்  சட்டம், ஒழுங்கு, சமாதானம், நல்லிணக்கம் போன்றவற்றின் சீர்குலைவுக்கான ஒரு முகவராக  இவர் செயற்படுகின்றார் என்று இவரைக் கண்டிக்கின்றோம். மேலும் மக்களை ஆத்திரமூட்டும் இந்த மதகுரு கலந்து கொள்ளும் நிகழ்வுகளை இனிமேல் பொதுமக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என்று தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். பொறுமையாலும், அன்புவழிமுறைகளாலும், விட்டுக்கொடுப்புடனும் தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகளை இம் மதகுரு வன்முறை, கபடத்தனம் போன்றவற்றைக் கையாண்டு தீர்க்கமுனைவது அவரது பக்குவமில்லாத தன்மையைக் காட்டுகின்றது.

 எனவே எமது மாவட்டத்து மக்களின் மதிப்பை உயர்த்துவதற்காக குறிப்பிட்ட மதகுருவை புறக்கணிப்பது மூலம்  ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.