விடுதலைப்புலிகளின் பெனர் கட்டியதாக பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவர் இருவர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பெனர்களை கட்டியதாக சந்தேகத்தின் பேரில் இரு மாணவர்களை படையினர் கைதுசெய்து களுவாஞ்சிகுடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை இரவு 9.30மணியளவில் களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் வைத்து இந்த இரு மாணவர்களும் படையினரால் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று வியாழக்கிழமை காலை களுவாஞ்சிகுடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் பட்டிருப்பு தேசிய பாடசாலையில் உயர்தரம் பயிலும் மோகன் டினேஸ்காந்த்,சாதாரண தரம் பயிலும் கு.விதுசன் எனவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் கட்டியிருந்த பெனரை தாங்கள் வாசித்துக்கொண்டிருக்கும்போதே தாம் படையினராக கைதுசெய்யப்பட்டதாக பொலிஸாரிடம் வழங்கிய முறைப்பாட்டில் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.