மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பிலான மீளாய்வுக்கூட்டம்

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டுத்திட்டம் தொடர்பான மீளாய்வுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நேற்றைய தினம் (26.11.2013) மாலை நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இக் கூட்டத்தில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் அனுராத குமாரசிறி, உதவிப்பணிப்பாளர் ஏ.ஏ.ஆர்.தரங்க, மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளினதும் பிரதேச செயலாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள் உள்ளிடோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, பிரதேச செயலக ரீதியாக முன்னேற்ற மீளாய்வுகள் நடைபெற்றதுடன், இத்திட்டம் தொடர்பான மதிப்பீடுகளின் போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட வேண்டிய விதிகள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், இவைபற்றி இந்திய அரசின் திட்டக்கண்காணிப்புப் பிரிவு மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கும் அறிக்கையாக சமர்ப்பிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

அதேநேரம், பிரதேச செயலாளர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 46 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் இந்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட 4000 வீடுகளில் முறையே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு  2 ஆயிரம் வீடுகளும் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டத்திற்கு தலா ஆயிரம் வீடுகளும் நிர்மாணிக்கப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசசார்பற்ற தொண்டு நிறுவனமான ஹியூமினிற்றி ஹபிடாட் இந்த வீட்டுத் திட்டத்தைக் கட்டி முடிப்பதற்கு உதவதுடன், மக்களின் முழுப்பங்களிப்புடன் ஐந்து இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபா செலவில் இந்த வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன.

இந்த வீடமைப்புத் திட்டம் 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வீட்டுத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான ஆரம்ப நிகழ்வு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கீழ் வரும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை உள்ளடக்கியதான மூன்று கிராமங்களில் கடந்த மே 22ஆம் திகதி தொடக்கி வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.