மட்டக்களப்பு பாரிய அபிவிருத்தியை கண்டுவருகின்றது – காலி மாநகர ஆணையாளர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் முடிவுற்ற நிலையில் பாரிய அபிவிருத்திப்பணிகளை தாங்கள் காண்பதாக காலி மாநகரசபையின் ஆணையாளர் ரணில் விக்ரம சேன தெரிவித்தார்.

காலி மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதன் அதிகாரிகள் திங்கட்கிழமை (15) மட்டக்களப்புக்கு விஜயம்செய்தனர்.

தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயத்தின் முதல் கட்டமாக இன்று காலை மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம்செய்தனர்.

இவர்களை மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் கே.சிவநாதன் மற்றும் அதன் அதிகாரிகள் வரவேற்றனர்.

இதன்போது இரண்டு மாநகர சபை பிரதிநிதிகளுக்குமிடையிலான ஒன்று கூடலொன்று மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் தமது அனுபவங்களையும் வேலைத்திட்டங்களையும் பகிர்ந்து கொண்டனர்.அத்துடன் இரு மாநகரசபைகளிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் மக்கள் தொடர்பாடல் முறைகள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.

காலி மாநகர சபையின் நடவடிக்கைகள் மற்றும் அதன் வேலைத்திட்டங்கள் பற்றியும் மட்டக்களப்பு மாநகர சபையின் வேலைத்திட்டங்கள் பற்றியும் இதன்போது கலந்துரையாடினர்.

இதில் காலி மாநகர சபை ஆணையாளர் ரணில் விக்ரமசேன, மற்றும் காலி மாநகர சபையின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய உறுப்பினரான ஏ.பௌசுல் மற்றும் உறுப்பினர்களான நியாஸ், ஜி.நிசாந்த, பி.சகிபால, ஆர்.றொசான் மவுசுல், கே.கபில கொபகே மற்றும் காலி மாநகர சபையின் நிருவாக அதிகாரி எம்.எஸ்.நயன தகாநாயக்க உட்பட அதன் அதிகாரிகளும் மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் கே.சிவநாதன் மற்றும் கணக்களார் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாநகரசபைக்கு வருகைதந்து கலந்துரையாடியதன் நினைவாக மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளரினால் நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.