மட்டக்களப்பு கல்லடி வேலூர் சக்தி வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல் மற்றும் பாடசாலைக்கு மேலைத்தேய தாள வாத்திய கருவிகள் கொள்வனவு செய்வதற்கு நிதியுதவி வழங்கிய மாகாணசபை உறுப்பினர் திரு துரைராஜசிங்கம் அவர்களுக்கு நன்றி நவிலல் மற்றும் இம்மாதம் ஓய்வு பெற இருக்கும் கோட்டை கல்லிவலய அதிகாரி டேவிட் ஐயா அவர்களுக்கு பிரியாவிடை அளித்தல் ஆகிய முப்பெருவிழா பாடசாலை அதிபர் திருமதி அருட்சோதி அவர்களின் அவர்களின் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளாக கோட்டைக்கல்வி அதிகாரி ம. டேவிட் மாகாணசபை உறுப்பினர் கே. துரைராஜசிங்கம் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் டி.சாந்திகுமார் சமுர்த்தி உத்தியோகஸ்தர் ஜெயதாஸன் மற்றும் பாசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர்; கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
தற்காலத்தில் அரசியல்வாதி என்றால் நரகவாதி எனும் அளவிற்கு சமுதாயத்தில் அரசியலின் நிலை இருக்கின்ற நிலையில் நானும் உங்கள் முன் அரசியல்வாதியாக நிற்கின்றேன். இன்று அரசியல் சாக்கடையாக்கப்பாட்டுள்ளது.
ஒரு நாட்டின் மிக உச்சளவான இயந்திரம் அரசியல் இயந்திரம் இந்த இயந்திரத்தில் யார் யார் இருக்க வேண்டுமோ அவர்கள் இருந்திருந்தால் இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்காது. முன்னொரு காலத்தில் அவ்வாறான அரசியல்வாதிகள் இருந்தார்கள் 70 முன்னிருந்த தமிழ் அரசியல்வாதிகளை பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். ஏன்ன செய்வது காலம் கெட்டுப் போனால் கோலம் கெட்டுப் போகும் குரங்குகளாக இன்று நாமும் இந்த சாக்கடைக்குள் இருக்கின்றோம்.
கல்வி என்று சொன்னால் மாணவர்களிடம் இருக்கும் நல்லனவற்றை அவர்கள் உள்ளிருந்து எடுப்பதாகும் அதனை மேற்கொள்பவர்கள்தான் இந்த ஆசிரியர்கள். பெற்றோர்கள் சிறுவர்கள் எனும் கற்களை ஆசிரியர்கள் எனும் சிற்பிகளிடம் கொடுக்கிறார்கள் அவர்களை சிறந்த சிற்பங்களாக மாற்ற வேண்டியது ஆசிரியர்கள் தான் அவர்களை குரங்குகளாக மாற்றக் கூடாது ஏனெனில் ஆசிரியர்கள் எதனையும் செய்யக் கூடியவர்கள் ஆசிரியர்கள் மாணவர்களை எவ்வாறு வழிநடத்துகிறார்களோ அவ்வாறுதான் மாணவர்கள் இருப்பார்கள்.
இங்கு இந்த ஆசிரியர்களின் சிறப்பான அர்ப்பணிப்பினால் இன்று இந்த சிறுவர்கள் சிறப்பாக சித்தி பெற்று சான்றிதழ்களை பெற்றுள்ளனர்.
கல்வி தொடர்பாக மட்டுமல்ல உலகத்தின் அனைத்து செயற்பாடுகளிலும் எனக்குள்ள கருத்து “தக்கென பிழைத்தல்” எனும் கோட்பாடாகும். காலத்தின் தேவைக்கேற்ப நாம் வாழ்ந்தாக வேண்டும்.
தற்போதுள்ள கல்வி சமுதாயம் மிகவும் போட்டி மிக்க சமுதாயம் அதுமட்டுமல்லாது தற்காலத்தில் எமது இன ரீதியாகவும் கல்வியில் நாம் முன்னேற்றம் காண வேண்டும். எமது பிள்ளைகளை எப்பாடு பட்டாவது நாம் கல்வியில் முன்கொண்டுவருதல் வேண்டும். எமது மாவட்டத்தில் வாகரை பிரதேசத்தில் ஒரு மாணவர் கூட இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற வில்லை எனும் விடயம் மிகவும் வருந்தத் தக்கது எமது தமிழ் பிரதேசத்தில் இவ்வாறானதொரு நிலை இவற்றை மாற்றும் திறன் எமது ஆசிரியர்கள் கையில் தான் இருக்கின்றது.
புத்தகத்தில் இருந்து படிப்பிப்பவர்கள் ஆசிரியர்கள் அல்ல இதயத்தில் இருந்து கற்பிக்க வெண்டும் அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.
ஆனால் மாணவர்களின் வெற்றிக்கு ஆசிரியர்கள் மட்டும் முயற்சித்தல் போதாது ஆசிரியர்கள் படிப்பித்து முடித்து வீட்டிற்கு அனுப்பியதும் பிள்ளைகள் வீட்டிலும் படிக்க வெண்டும். அது பெற்றோரின் கைகளில் தான் இருக்கின்றது. பிள்ளைகளை வீட்டில் படிக்க வையுங்கள். பிள்ளைகளே நீங்கள் படிக்கும் போது எழுதி எழுதி படிக்க வேண்டும் அப்போதுதான் அது மனதிலும் மூளையிலுமிருக்கும். பிள்ளைகளை நேரத்திற்கு தூங்க வைக்க வேண்டும்.
நேரத்திற்கு தூங்கி நேரத்திற்கு எழுந்திருக்கும் பிள்ளைகள் தான் நல்ல அறிவுள்ளவர்களாகவும் நல்ல சுகாதாரமுள்ளவர்களாகவும் இருப்பார்கள் என அறிஞர்கள் கூறியுள்ளனர்.
எனவே பெற்றோர்களாகிய நாம் பிள்ளைகள் வீட்டில் நன்றாக படிக்கின்றார்களா என பார்க்க வேண்டும்.
இன்று இலத்திரனியல் ஊடகங்கள் நிறைந்து காணப்படுகின்றது அவற்றை பிள்ளைகள் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என கவனிக்க வேண்டும். உலகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் வீட்டுக்குள்ளே கொண்டு வைத்திருக்கின்றது இந்த இலத்திரனியல் சாதனங்கள் இவற்றை பக்குவமாக நாம் பாவனை செய்யதல் வேண்டும்.
பெற்றோர்களாகிய நாம் பிள்ளைகளை பாராட்ட வேண்டும் ஏனெனில் அவர்களின் வயது மனம் எமது பாராட்டிற்காக ஏங்கும் அவர்களை நாம் உயர்த்தி விட வேண்டும். பிள்ளைகளை பள்ளி பெற்றோர்களாகிய நீங்கள் கனவு காண வேண்டும் அக்கனவு மெய்ப்பட நீங்களும் கூடுதலாக உழைக்;க வேண்டும். பிள்ளைகள் உங்களுக்கு கடவுள் கொடுத்த பொக்கி~ங்கள் அவர்களை பாதுகாப்பது நீங்கள்தான்.
மேலும் அரசியல்வாதிகளை நரகவாதிகள் என்று கருதவேண்டாம். அரசியல் சாக்கடையாக்கப்பட்டுள்ளது இதனை சுத்தம் செய்ய நல்லவர்கள் எல்லாம் அரசியலுக்கு வரவேண்டும். நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால்தான் இது சுத்திகரிக்கப்படும். அதுவும் எமது இனத்தைப் பொறுத்தவரை அரசியல் மிகவும் அவசியமானது. எம் இனத்திலுள்ள புத்திஜீவிகள் அரசியலுக்கு வரவேண்டும். நானும் 1994ம் ஆண்டில் இருந்து 2000ம் ஆண்டு வரை அரசியலில் இருந்தவன் பின் குடும்ப சூழல் காரணமாக இதிலிருந்து ஒதுங்கினேன் ஆனால் தற்போது காலத்தின் தேவையினால் மீண்டும் இதற்குள் குதித்துள்ளேன். ஏன்ன செய்வது வீட்டைக் கவனிக்காமல் இருப்பதற்குரிய விதி எங்களுக்கு.
இன்று வடமாகாண தேர்தலைப் பாருங்கள் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் அனைவரும் பெரிய கல்விமான்கள் புத்திஜீவிகள். புpரித்தானிய பிரதமர் கமரூன் வந்து சந்தித்து செல்லும் அளவிற்கு இருக்கின்றார்கள். நாமும் எமது மாகாணமும் அதுபோல மாற வேண்டும் அரசியல் தீண்ட தகாதது என ஒதுக்கிவிடாமல் இதனை சீர்திருத்த முன் வரவேண்டும்.
இங்கு பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டது என்ன செய்வது நாம் கிழக்கு மாகாணத்தில் எதிர்க்கட்சி ஆசனத்தில் இருக்கின்றோம். கடந்த மாகாணசபைத் தேர்தலில் எமது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு 6500 வாக்குகள் மேலதிகமாக கிடைத்திருந்தால் எமக்கு ஒரு உறுப்பினர் அதிகமாக கிடைத்திருப்பார் அதன் மூலம் நாம் இரண்டு போனஸ் ஆசனங்களைப் பெற்று கிழ்ககு மாகாணத்தைக் கைப்பற்றியிருப்போம் ஆனால் எமது மக்கள் அதனை செய்யவில்லை அதனால்தான் அவர்களிடம் பிடுங்கி எடுத்து அவர்கள் தருவதில் தான் நாம் உங்களுக்கு வழங்க முடியும் ஆனாலும் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் இருங்கள் என்று தெரிவித்தார்.
