மட்டக்களப்பில் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டுவிழா நிகழ்வுகள் நவம்பர் மாதத்தில் நடைபெறவள்ளதாக நூற்றாண்டுவிழாச்சபையின் செயலாளர் ஆனந்தா ஏ.ஜீ.ராஜேந்திரம் தெரிவித்தார்.
தமிழ் ஆய்வுக்கும் தமிழின் எழிச்சிக்கும் வித்திட்ட தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வினை ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி அவரது பிறந்த தினத்தன்று நினைவுப் பேருரையுடன் மட்டக்களப்பில் இவ் நூற்றாண்டு விழாச்சபை ஆரம்பித்து வைத்திருந்தது.
அதனைத் தொடர்ந்து பெரும் எடுப்பிலான நூற்றாண்டு விழாவினை எதிர்வரும் நவம்பர் 8 முதல் 10ஆம் திகதி வரை மட்டக்களப்பு மகாஜனாக்கல்லூரியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ் நூற்றாண்டுவிழா ஆறு அமர்வுகளாக நடைபெறவிருக்கின்றது. இதில், ஆய்வரங்கு, கவி அரங்கு, கலை அரங்கு, விவாத அரங்கு, இலக்கிய அரங்கு என்பவற்றுடன் தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா முதல்நாள் தபால் உறையும், நூற்றாண்டு விழா தொடர்பான 20க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகளைத் தாங்கியதும், அவரது ஆக்க முயற்சிகள் ஆய்வுகள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கியதுமான நூல் தொகுதியும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை விழாச்சபையின் உப குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன.
அத்துடன், பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் கருத்தரங்குகள்இம்மாதம் 23ஆம் திகதி தொடக்கம் மாவட்டத்தில் உள்ள மகாவித்தியாலயங்கள், கல்லூரிகளின் மாணவர்கள் மத்தியில் நடைபெறவுள்ளன. இதற்கான நடவடிக்கைகளை விழாக்குழுவினதும் பாடசாலைக் கருத்தரங்குக் குழுவினதும்தலைவருமான பேராசிரியர் சி.மௌனகுரு மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.