செங்கலடி பிரதேச சபை – தனது முன்னாள் ஊழியரின் இறுதிக்கிரியைக்கு மின்குமிழ் வழங்க மறுத்த சம்பவம் பதிவு!
மட்டக்களப்பு - ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபைக்காக தமது வாழ்நாள் பங்கினை அர்ப்பணித்து பணியாற்றிய முன்னாள் ஊழியரின் இறுதிக்கிரியைக்கு மின்குமிழ் (Street Light) வழங்குவதற்கு செங்கலடி பிரதேச சபை மறுத்த சம்பவம் அப் பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தினம் உயிர்ழந்த முன்னாள் ஊழியர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வுபெற்று பிரதேச சபையின் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளில் தனது பங்களிப்பை வழங்கியவர் எனக் குறிப்பிடப்படுகிறது. அவர் நேற்றையதினம் மாரடைப்பு காரணமாக மரணமடைந்ததைத் தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இறுதிக்கிரியைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். அந் நிலையில் இரவு நேரங்களில் நிகழும் இறுதி சடங்கு மற்றும் இருளைத் தவிர்க்கும் ஒளியூட்டும்வகையில் பிரதேச சபையிடம் மின்குமிழ் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், பிரதேச சபை அதனை வழங்க மறுத்ததோடு, தங்களிடம் போதிய மின்குமிழ் இல்லை என்றும் 'இது அதிகாரபூர்வ அனுமதி பெறாத கோரிக்கையாகும்' எனக் காரணம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
இதற்கு முன்னாள் ஊழியரின் குடும்பத்தினர் மற்றும் அவரரது பொதுமக்கள் கடும் மன வேதனையைத் தெரிவித்துள்ளனர். 'செங்கலடி பிரதேச சபைக்காக தன்னலமின்றி பல வருடங்கள் உழைத்த ஒருவரின் இறுதிக்கிரியைக்குக் கூட சிறிய ஒளியை வழங்கத் தயங்குவது மனிதாபிமானமற்ற செயல்' என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
மேலும், சில உள்ளூர் அமைப்புகள் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு, பிரதேச சபை நிர்வாகம் எதிர்காலத்தில் இதுபோன்ற அநீதிகள் நடைபெறாமல் உறுதிசெய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளன.
சமூக வலைத்தளங்களிலும் இந்தச் சம்பவம் தீவிரமான விவாதத்துக்குள்ளாகி 'மனிதாபிமானத்தை விட அதிகாரபூர்வ நடைமுறைகள் மேலோங்கும் நிலைமையைச் சீர்செய்ய வேண்டும்' என்ற கருத்துக்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
 

.jpeg) 
