ஆற்றில் குதித்த யுவதியை காப்பாற்றியவர்களுக்கு பாராட்டு

ஆற்றில் குதித்த யுவதியை காப்பாற்றிய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பாராட்டப்பட்டப்பட்டுள்ளனர்.

கே. பண்டார (பி.சி. 77890) மற்றும் ஏ.பி. ஜயசிங்க (பி.சி. 75821) ஆகிய போக்குவரத்து பொலிஸாரே மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வி. இந்திரனினால் பாராட்டப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு பழைய கல்லடிப் பாலத்திலிருந்து தற்கொலை செய்யும் நோக்கோடு ஆற்றினுள் 28 வயதுடைய யுவதி குதித்துள்ளார். இதன்போது கல்லடிப் பாலத்தில் கடமையிலிருந்த குறித்த இரண்டு பொலிஸாரும் ஆற்றினுள் பாய்ந்து உயிருக்கு போராடிய பெண்ணை மீட்டுள்ளனர்.

இந்த துணிகர முயற்சியை கேள்வியுற்ற மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் வி.இந்திரன் இரண்டு போக்குவரத்து பொலிஸாரையும் அழைத்துப் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த பெண்ணிடம் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.