ஆரையம்பதி பொதுச்சந்தையின் இடநெருக்கடியை தீர்க்கும் வகையில் புதிய சந்தை கடைத்தொகுதி

மட்டக்களப்பு,ஆரையம்பதி பிரதேசத்தின் பொதுச்சந்தையில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடியை குறைக்கும் வகையில் புதிய சந்தை கடைத்தொகுதி அமைக்கப்படவுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸவிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த சந்தை தொகுதி அமைக்கப்படவுள்ளது.

இதன் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு புறநெகும திட்டத்தின் கீழ் சுமார் 14 இலட்சம் ரூபாவினை ஒதுக்கீடுசெய்துள்ளது.

இந்த சந்தை கட்டிட தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை மண்முனைப்பற்று பிரதேசசபையின் செயலாளர் திருமதி ஜே.அருள்பிரகாசம் தலைமையில் இடம்பெற்றபோது பிரதம அதிதியாக உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திருமதி சத்தியானந்தி,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் வாமதேவன் கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து உற்பத்திப்பொருட்கள் ஆரையம்பதி சந்தையில் விற்பனை செய்யப்பட்டுவருவதன் காரணமாக பெரும் இடம் நெருக்கடியை எதிர்கொண்டுவந்தது.

இந்த நிலையில் இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் முயற்சியால் இந்த கட்டிட தொகுதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.