மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை ஆற்றுகை நிகழ்வொன்றை நடத்தியது.
கடந்த மூன்றாவது வருடமாகவும் ஆலய முன்றிலில் பாரம்பரிய அரங்க காட்சிக்கூடத்தினையும் அரங்க ஆற்றுகைகளையும் இவ்வாண்டும் சிறப்பாக நடத்தியது.
நுண்கலைத்துறைத் தலைவர் கலாநிதி சி.ஜெயசங்கர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அதிதிகளாக கலைகலாசாரப் பீடாதிபதி. பேராசிரியர்.மா.செல்வராசா அவர்களும் சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி.க.பிரேம்குமார் அவர்களும், கிழக்குப்பல்கலைக்கழகப் பதிவாளர் திரு. கே.மகேசன் அவர்களும், மாமாங்கப் பிள்ளையார் ஆலய வண்ணக்கர் திரு.த.அகிலன் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
எதிர்வரும் 01.08.2013 தொடக்கம் 04.08.2013 வரை இந்நிகழ்வுகள் இடம்பெற உள்ளன. இந்நாட்களில் மாலை 05 மணிக்கும் இரவு 11.மணிக்கும் பாரம்பரிய கூத்து ஆற்றுகைகள் நிகழ்த்தப்படவுள்ளன.
இதில் தப்பு இசை, நுண்கலைத்துறையின் “மழைப்பழம்” வடமோடி சிறுவர் கூத்து, “கண்டியரசன்” தென்மோடிக் கூத்து, பண்டாரியாவெளி நாகர் கலைமன்றத்தின் “நொண்டி நாடகம்” தென்மோடிக் கூத்து, முனைக்காடு நாகசக்தி கலைமன்றத்தின் “அலங்காரரூபன்” தென்மோடிக் கூத்து, கரவெட்டி கலைக்கழகத்தின் “பூதத்தம்பி விலாசம்”,வாதக்கல்மடு கலைஞர்களின் “கண்டியரசன் ஒப்பாரி” ஆகிய பாரம்பரிய நிகழ்த்து கலைகளின் ஆற்றுகைகள் இடம்பெற உள்ளன.
இத்துடன் பாரம்பரிய கூத்துக்கலையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கி வரும் உடை ஒப்பனைக் கலைஞர்களும், சதங்கைகளை பாதுகாத்து பராமரித்து வரும் கலைஞர்களும், மத்தளங்களை உருவாக்கி இணக்கி வரும் கலைஞர்களும் துணைவேந்தர் அவர்களால் கௌரவிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.