(எம்.எஸ்.நூர்)மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தின் மட்டு நகர் வாவி அருகில் மீன் பிடி இயந்திர படகுகள் நிறுத்துவதை உடனடியாக தடுக்குமாறு கோரி சுற்றாடல் மத்திய அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலக பொறுப்பதிகாரி எஸ்.கோகுலன் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தின் மட்டு நகர் வாவி அருகில் மீன் பிடி இயந்திர படகுகள் நிறுத்துவதால் சுற்றாடல் பாதிப்பு தொடர்பாக அப்பிரதேசத்திலுள்ள பொது அமைப்புக்களும், பொதுமக்களும் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு செய்த முறைப்பாட்டினையடுத்து அங்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் செய்த களப்பரிசோதணைகளின் போது மேற்படி இடத்தில் மீன் பிடி இயந்திர படகுகள் நிறுத்தி வைப்பதால் சுற்றாடல் மாசு அடைவதாக அவதானிக்கப்பட்டுள்ளது என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தின் அருகிலுள்ள அதாவது மட்டக்களப்பு மீன்பிடி திணைக்களத்தின் முன் சுமார் 50 இயந்திர படகுகள் வாவியின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சில இயந்திர படகுகளில் திருத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் இதன் போது ஏற்படும் எண்ணை கசிவு வாவியுல் செல்வதை அவதானிக்க கூடியதாகவும் உள்ளது.
பாரிய மீன் பிடி வலைகள் வாவி நீர்pல் கழுவும் நடவடிக்கைகள் காணப்படுகின்றன. மற்றும் மீன் தலை, கழிவு நீர், பிளாஸ்ரிக், றெஜிபோம் துண்டுகளும் வாவியில் விடப்படுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நடவடிக்கைகள் மட்டு நகர் வாவியை மாசடையும் நிலையை அதிகரிக்க காரணமாக உள்ளதுடன் கரையோர இறால் மற்றும் நண்டு, மீன் பிடி போன்ற நடவடிக்கைகள் நடைபெறுவதற்கு தடையாகவும் உள்ளது.
கழிவு எண்ணை வாவியில் விடப்படுவதால் வாவி நீருடன் எண்ணைப்படலம் கலந்து நீர் வாழ் உயிரினங்களின் வாழ்விற்கு அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகரித்து செல்கின்றது.
இவைகளை கருத்திற் கொண்டு மேற்படி இடத்தில் மீன்பிடி இயந்திர படகுகள் நிறுத்துவதை உடனடியாக தடுத்து கரையோர இறால் நண்டு மற்றும் மீன்பிடிப்பதற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணமும், மட்டக்களப்பு வாவி மாசடைதலையும் வாவியின் நீர்வாழ் உயிரினங்களின் அழிவு அபாயத்தினையும் தவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.