மட்டக்களப்பில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு சட்ட விரோத ஆட்கடத்தலை தடுக்கும் வகையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கடற் படையினர் ஆகியோர் இணைந்த ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர். மாவட்டத்தின் கடற்கரை பிரதேசங்களில் இந்த ரோந்து நடவடிக்கைள் அதிகமாக இடம்பெற்று வருகின்றன.
சட்டவிரோதமாக படகில் அவுஸ்திரேலியாவிற்கு செல்பவர்கள் தொடர்பில் அவதானிப்பதற்காகவே இந்த ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்கரையோரங்களிலுள்ள விடுதிகளில் தங்குபவர்கள், நடமாடுபவர்கள், வெளிப் பிரதேசங்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்து கடற்கரை ஓரங்களில் காணப்படுபவர்கள் தொடர்பில் ரோந்து செல்லும் பாதுகாப்பு படையினர் அவதானம் செலுத்தி வருகின்றனர்.
அண்மை காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகில் செல்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.