இருளில் மூழ்கும் செட்டிபாளையம் -வீதி விளக்கு பொறுத்துமாறு மக்கள் கோரிக்கை

மட்டக்களப்பு,மண்முனைப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் முக்கிய பகுதிகள் இரவுவேளைகளில் இருளில் மூழ்கியுள்ளதால் பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

அதிக சன நெரிசலைக்கொண்ட பிரதேசமாக காணப்படும் செட்டிபாளையத்தில் உள்ள ஆலயங்கள்,வைத்தியசாலை மற்றும் பாடசாலைகளைக்கொண்ட பகுதியில் இரவு வேளைகளில் இருளில் மூழ்கியுள்ளதன்; காரணமாக இரவு வேளையில் நடமாடுவதை மக்கள் தவிர்த்துவருகின்றனர்.

அத்துடன் செட்டிபாளையத்தின் முக்கிய பகுதியான வைத்தியசாலை வீதி இரவில் இருளில் மூழ்குவதன் காரணமாக அவசர நிலையில் வைத்தியசாலைக்கு செல்வோர் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்குகின்றனர்.

குறிப்பாக இந்த வைத்தியசாலைக்கு கர்ப்பிணிப்பெண்களே அதிகளவில் வருவதால் இரவு வேளைகளில் பிரசவத்துக்காக பெண்களை கொண்டுவருவோர் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்குகின்றனர்.

அத்துடன் இந்த வீதியில் மட்டக்களப்பின் பிரபல ஆலயமான கண்ணகியம்மன் ஆலயமும் உள்ளது.அங்கு இரவு வழிபாடுகளுக்கு சென்றுவருவோரும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்;கிவருகின்றனர்.

இது தொடர்பில் கடந்த காலத்தில் இப்பிரதேச அரசியல்வாதிகள்,அதிகாரிகளிடம் இது தொடர்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டபோதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இப்பகுதி மாணவர்கள் அரவு வேளைகளில் இடம்பெறும் தனியார் வகுப்புகளுக்கும் இந்த இருள் காரணமாக செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே செட்டிபாளையத்தின் முக்கிய பகுதிகள் மட்டுமாவது மின் விளக்குகளை பொறுத்த நடவடிக்கையெடுக்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.