மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்துக்கு கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி விஜயம்

(கிருஸ்ணா)

இராணுவத்தின் கிழக்குப் பிராந்திய கட்டளைத் தளபதி மேஜர் லால் பெரேரா இராணுவத்திற்கு ஆசி வேண்டி வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்றைய தினம் மாலை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அவருடன், மின்னேரியிலுள்ள பிரிக்கேட் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேணல் மஞ்சுள ரத்நாயக்க, கஜபா றெஜிமென்ரின் மட்டக்களப்பு கட்டளைத் தளபதி கேர்ணல் பிரியந் ஜித் உள்ளிட்ட இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன் போது, மாமாங்கேஸ்வர் ஆலய பரிபாலன சபைத் தலைவர்  எஸ்.அகிலன், செயலாளர் மற்றும் நிருவாகிகள், விஸ்வ ஹிந்து பரிசத்தின் கிழக்குப் பிராந்திய இணைப்பாளர் வி. கமலதாஸ், மட்டக்களப்பு, அம்பாறை இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் தலைவர் ஜீ. துரையப்பா, செயலாளர் சி.புஸ்பலிங்கம், துறவியான சுவாமி மகேஸ்வர சயித்தன்ய, இந்து சேவா சங்கத்தின் எஸ். சுதர்சனன், முதலைக்குடா ஸ்ரீ விக்னேஸ்வரா ஆலய பரிபாலன சபையின் சி.அகிலேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

வழிபாடுகளையடுத்து, மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய நிருவாகிகள், மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியங்களின் பிரதி நிதிகளையும் சந்தித்தார்.

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடினார்.

அதே நேரம், விரைவில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் இந்து ஆலயப் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாட விரும்புவதாக கிழக்குப் பிராந்திய கட்டளைத் தளபதி மேஜர்  லால் பெரேரா நிருவாகிகள், பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.