கரடியனாறில் மினி சூறாவளி – 63 வீடுகள் சேதம்

(எம்.எஸ்.நூர்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று மாலை வீசிய சுழல் காற்றினால் 63 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.

இப்பிரதேச செயலாளர் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை மாலை வீசிய சுழல் காற்றினால் 63வீடுகள் சேதமடைந்துள்ளன.இவற்றில் 15வீடுகள் முழுமையாகவும், 48விடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

இதில் கரடியனாறு பிரதேசத்தில் 10வீடுகள் முழுமையாகவும், 7 வீடுகள் பகுதியளவிலும், மரப்பாலம் பிரதேசத்தில் 5வீடுகள் முழுமையாகவும், 37 வீடுகள் பகுதியாகவும், கித்துல் பிரதேசத்தில் 4 வீடுகள் பகுதியளவிலும் சேதமைடந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

சேதமநை;த வீடுகளை இந்த இடங்களுக்கு சென்ற ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் பார்வையிட்டதுடன் சேதவிபரங்களை திரட்டுமாறு சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கு உத்தரவிட்டார்.
கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளும் சென்று பார்வையிட்டனர்.

இந்த இடங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் பனிப்புரையின் பேரில் சென்ற அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் மற்றும் அதிகாரிகள் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டதுடன் சேதமதிப்பீடுகளையும் மதிப்பீடு செய்தனர்.

இந்த அனர்த்தம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்சின் ஆலோசனையின் பேரில் சேத விபரங்கள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கொழும்பு மத்திய நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளன.