39 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கபடிப் போட்டியில் கிழக்கு மாகாணம் தங்கப்பதக்கம்.

(சசி ஜதாட்சன்)

விளையாட்டுத் துறை அமைச்சின் 39 ஆவது தேசிய விளையாட்டு விழாப் போட்டிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்று இடம்பெற்ற தேசிய கபடிப் போட்டியில் கிழக்கு மாகாண அணி சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டு தங்கப் பதக்கத்தினை தட்டிக் கொண்டுள்ளது.

விளையாட்டு அபிவிருத்தி அமைச்சின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற போட்டியிலேயே கிழக்கு மாகாணம் வடமாகாண அணியினை எதிர்த்தாடி 12:18 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்றள்ளது.

கிழக்க மாகாணத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தி மட்டக்களப்பு கபடி அணியினர் போட்டியிட்டனர்.இப் போட்டியில் 2013ஆம் ஆண்டுக்கான ஆட்ட நாயகனாக இவ் அணியின் வீரர் கே.ஜினோகரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கிழக்கு மாகாணம் நான்கு தடவைகள் தங்கப் பதக்கத்தினையும் ஒரு தடவை பித்தளைப் பதக்கத்தினையும் பெற்றுள்ளது.

ஏற்கனவே கிழக்கு மாகாணத்திற்காக மட்டக்களப்பு திருகோணமலை அணிகளில் தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் விளையாடி நான்கு தங்கப்பதக்கத்தினை வென்ற நிலையில் கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்ட அணி கிழக்கு மாகாண சார்பாக தனியாக விளையாடி பித்தளை பதக்கத்தைப் பெற்ற நிலையில் இவ் வருடம் தனியாக விளையாடித் தங்கப் பதக்கத்தினைப் பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட இவ் அணியினர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக நடாத்தப்படும் தேசிய விளையாட்டு விளாவில் இரண்டு தங்கப்பதக்கங்களையும் மூன்று வெள்ளிப் பதக்கங்களையும் ஒரு பித்தளைப் பதக்கத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.