யானையின் தாக்குதலை தடுக்கக மட்டக்களப்பு மாவட்டத்தில் 300 கிலோமீற்றர் தூர மின் வேலி அமைக்க முடிவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக நிலவிவரும் யானையின் தாக்குதலை தடுக்கும் வகையில் 300 கிலோமீற்றர் நீளமாக மின் வேலிகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரத்நாயக்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலத்தில் அதிகரித்துச்செல்லும் யானையின் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் உயர் மட்ட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட அரசாங்க அதிபர் வாமதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரத்நாயக்க,பிரதிப்பணிப்பாளர் தௌபீக் மற்றும் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள்,மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள்,பிரதேச செயலாளர்கள் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்;டத்தின் எல்லைப்பகுதிகளில் அண்மைக்காலமாக யானையின் தாக்குதல்கள் காரணமாக உயிரிழப்புகள்,சொத்து இழப்புகள்,விவசாய பண்ணைகள் அழிவுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்த சூழ் நிலை காரணமாக இடம்பெயர்ந்து மக்கள் சுமார் 25 வருடமாக வேறு இடங்களில் வாழ்ந்தபோது அந்த இடங்களை யானைகள் வாழ்விடமாக கொண்டன.

பின்னர் அப்பகுதிகளில் பொதுமக்கள் குடியேறியபோது யானையின் தாக்குதல்கள் அதிகரித்தது.இது தொடர்பில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அம்பாறை மற்றும் திருகோணமலை,பொலநறுவை ஆகியவற்றில் தேசிய வன பாதுப்பு பகுதிகளில் இருந்து யானைகள் மட்டக்களப்பு எல்லைப்பகுதிகளுக்குள் புகுந்து தாக்குகின்றன.

வுரட்சி மற்றும் மழைகாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதிக்குள் இந்த தாக்குதல்களை யானைகள் ஏற்படுத்துகின்றது.
யானைகளுக்கான வழிப்பாதைகள் அடைபட்டுள்ள நிலையிலேயே இந்த நிலையேற்படுகின்றது.

யானைகள் உட்புகும் பகுதிகளில் சில இடங்களில் மின் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை விட்டுவிட்டு அமைக்கப்பட்டுள்ளதால் அவை வெற்றிபெறவில்லை.மின் வேலியை அம்பாறை தொடக்கம் வடமுனை வரையில் தொடராக அமைப்பதன் மூலமே யானையின் தாக்குதலை தடுக்கலாம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானையின் தாக்குதலை தடுக்கும் வகையில் 300 கிலோமீற்றர் தூரத்துக்கு மின் வேலி அமைப்பதன் மூலமே யானையின் தாக்குதலை தடுக்கமுடியும்.

ஒரு கிலோமீற்றர் வேலி அமைப்பதற்கு ஐந்து இலட்சம் ரூபா செலவு ஏற்படும் 300 கிலோமீற்றருக்கு 150 மில்லியன் ரூபா செலவு ஏற்படும்.இதனை அமைப்பதன் மூலமே யானை தாக்குதலை தடுக்கலாம்.

அத்துடன் யானைகள் பயனிக்கும் பாதைகளை சரியான முறையில் அமைப்பதன் மூலம் அவை மக்கள் குடியிருப்புகளை நோக்கி செல்வதை தடுக்கும்.