மக்கள் பங்களிப்புடனான அபிவிருத்திக்கு ஆலோசனைக்குழு

ஏறாவூர் பற்று பிரதேசசபையின் அபிவிருத்தி தொடர்பிலான ஆலோசனைக்குழு கூட்டம் அண்மையில் இடம்பெற்றதுடன் புதிய ஆலோசனைக்குழுவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

39கிராம சேவையாளர் பிரிவைக்கொண்ட ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையானது அதிகளவான வறிய மக்களைகொண்ட பிரதேசமாகும்.

இதன் கீழ் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து சிறந்த வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும் வகையில் இந்த ஆலோசனைக்குழு நியமனம் செய்யப்பட்டுவருகின்றது.

இதன் கீழ் இந்த ஆண்டுக்கான ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. பிரதேசசபையின் செயலாளரை தலைவராகக்கொண்டுள்ள இந்த ஆலோசனைக்குழுவில் கிராம உத்தியோகத்தர் பிரிவில் இருந்து ஒருவர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இந்த குழுவானது கிராம மட்டத்தில் மேற்கொள்ளப்படும் உட்கட்டமைப்பு தொடர்பிலான நடவடிக்கைக்கு தங்களது ஆலோசனைகளை வழங்கும்.

மக்கள் பங்களிப்புடனான அபிவிருத்தியை கொண்டுசெல்லும் வகையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பற்று பிரதேசசபையின் செயலாளர் ஜோன்பிள்ளை தெரிவித்தார்.