வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் தொழில்நுட்பவியல் பிரிவு ஆரம்பிப்பு

க.பொ.த. உயர்தர பாடத்திட்டத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தொழிநுட்பவியல் பிரிவினை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று பாடசாலையின் அதிபர் தி.ரவி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில்  ஜனாதிபதியின் ஆலோசகரும், முன்னாள் முதல்வருமான சிவனேசதுரை – சந்திரகாந்தன்; பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மேலும் கல்குடா வலயக்கல்வி  பணிப்பாளர் எஸ்.சிறிகந்தராசா , சித்தாண்டி பிரதேச இதர பாடசாலையின் அதிபர்கள், பாடசாலையின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

தொழிநுட்பவியல் பிரிவினைக் கற்பிப்பதற்காக இலங்கையில் உள்ள பாடசாலைகளில் 200 பாடசாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு கல்குடா வலயத்தில் வந்தாறுமூலை மகா வித்தியாலயம், கிரான் மகா வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் இப்புதிய கற்கைப் பிரிவினைக் கற்பதற்காக 48 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.நேற்றையதினம் இந்த கற்கை பிரிவு ஆரம்ப வபைவத்தின்போது செயன்முறை பரிசோதனை முறை ஒன்றும் செயற்படுத்திக் காட்டப்பட்டது.

தொழிநுட்பவியில் பிரிவைக் கற்பதற்கு கலைப்பிரிவிற்கு மாணவர்கள் அனுமதிப்பதற்குத் தேவையான ஆரம்ப தகைமையுடன் மேலதிகமாக கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் சித்தியடைந்திருக்கவேண்டியது அவசியமானதாகும்.
தொழிநுட்பவியல் பாடப்பிரிவில் பின்வரும் பாடங்களை மாணவாகள் எடுக்கமுடியும்.

1.தொழிநுட்பவியலுக்கான விஞ்ஞானம்
2. பொறிமுறைத் தொழிநுட்பம் அல்லது  உயிர்வளத் தொழிநுட்பம்

அத்துடன் மூன்றாவது பாடத்தினை பின்வரும் 10 பாடங்களில் ஒன்றிலிருந்து தெரிவுசெய்துகொள்ளமுடியும்.

1.தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம்
2. தொடர்பாடலும் ஊடகக் கற்கையும்
3. ஆங்கிலம்
4. புவியியல்
5. பொருளியில்
6. விவசாய விஞ்ஞானம்
7. கணக்கீடு
8. வணிகக் கல்வி
9. மனைப் பொருளியல்
10. சித்திரம்