மியான் கல் ஆறு மியான்கல் எனும் பகுதியிலிருந்து உற்பத்தியாகி பெரியவட்டவான் பகுதிக்கூடாகச் சென்று பெருமாவெளி எனும் கிராமத்தை அடுத்துள்ள பகுதியில் வாழைச்சேனை வாவியின் எல்லையில் சேர்கின்றது.
இந்த மியான்கல் ஆற்றின் ஒரு பகுதி வள்ளி ஆறு என அழைக்கப்படுகின்றது. குறிப்பாக தரவை வீதியிலுள்ள 5 ஆம் கட்டைச் சந்தியிலிருந்து பெரியவட்டவான் வரை செல்லும் வீதிக்கிடையில் அமைந்துள்ள ஆற்றுப் பகுதி வள்ளிஆறு என அழைக்கப்படுகின்றது.
வள்ளிஆற்றுக்கு மேலாக வீதியில் அமைக்கப்பட்டுள்ள பாலமானது கடந்த 2012 இறுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது பாதிக்கப்பட்டு ஒரு பகுதி கீழிறங்கிக் காணப்படுகின்றது.
இவ்வீதி வழியால் ஆரம்பத்தில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தபோதிலும் பின்னர் அது தற்காலிகமான முறையில் புனரமைக்கப்பட்டு போக்குவரத்து இடம்பெறுகின்றது.
ஆனால் இத்தகைய தற்காலிக புனரமைப்பானது எத்தனை காலத்திற்கு தாக்குப் பிடிக்கும் என்பது கேள்விக்குறியாகும். மேலும் எதிர்வரும் மாரிகாலத்தில் ஆற்றுநீர் பெருக்கெடுத்தால் பாலம் முற்றாக முறிந்து போக்குவரத்து துண்டிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் எடுக்கவேண்டும் என குறிப்பிட்ட பிரதேச விவசாயி ஒருவர் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.