ஏறாவூர் ஐந்தாம் வட்டாரத்தில் சுயதொழில் ஊக்குவிப்பு உதவித்தொகை வழங்கல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஏறாவூர் ஐந்தாம் வட்டாரத்தில் உள்ள வறிய குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா)வினால் உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.

ஏறாவூர் பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய வறுமை நிலையில் உள்ளவர்களின் நலன் கருதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா)மினால் ஒரு இலட்சம் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

அதனுடன் குறித்த பிரதேசத்தில் உள்ள கிராம அபிவிருத்தி சங்கத்தின் இரண்டு இரண்டு இலட்சம் ரூபா உட்பட மூன்று இலட்சம் ரூபா இலகு கடன் அடிப்படையில் சுயதொழிலுக்காக வழங்கிவைக்கப்பட்டன.

இது தொடர்பான நிகழ்வு ஏறாவூர் ஐந்தாம் வட்டார பாடசாலையில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் நிகழ்ச்சி திட்ட உதவியாளர் திருமதி ரூபா சுகுமாரன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) பிரதம அதிதியாக கலந்துகொண்டு பயனாளிகளுக்கான உதவித்தொகைகளை வழங்கிவைத்தார்.

இதன்போது 30 குடும்பங்களுக்கான உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.இவற்றின் மூலம் சிறு வியாபாரம், மட்பாண்டம், கோழிவளர்ப்பு,சிறுபயிர்ச்செய்கை மூலம் தங்களது வருமானங்களை பெருக்கிக்கொள்ளமுடியும் என ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் நிகழ்ச்சி திட்ட உதவியாளர் திருமதி ரூபா சுகுமாரன் தெரிவித்தார்.