பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களும், முஸ்லிம் சமூகத்தின் மீதான இனவாத அச்சுறுத்தல் நடவடிக்கைகளும் இந்நாட்டில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் மக்களின் ஆணைகளைப் பெற்று பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலுமாக அரசியல் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் மக்கள் பிரதிநிதிகளும், அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களும் இதுவரை இப்பிரச்சினைகளுக்க தீர்வுகளைக் காணமுடியாமல் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டும், பாதுகாப்புச் செயலாளருக்கு கடிதங்கள் எழுதிக் கொண்டிருப்பதும் கேலிக்கூத்தான விடயங்களாகும் என நல்லாட்சிக்கானமக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
மஹியங்கனை அறபா ஜும்ஆப்பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து அவ்வியக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அனுராதபுரம் தர்கா தாக்கப்பட்ட சம்பவத்திலிருந்து மஹியங்கனை அறபா ஜும்ஆப்பள்ளிவாசல் மீதான தாக்குதல் வரை இந்தநாட்டில் ஏறத்தாழ 25க்கும் அதிகமான பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களும், முஸ்லிம் சமூகத்தின் கலாச்சாரங்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படும் சம்பவங்களும், முஸ்லிம்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அடாவடித்தனங்களும் தொடர்ந்தேச்சியாக நிகழ்ந்துவருகின்றன.
இவ்வாறான சம்பவங்கள் நிகழும் போதெல்லாம் அரசாங்கத்திற்கு தமது முழமையான ஆதரவை வழங்கி அதனை இன்றுவரைக்கும் நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்ற எமது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தஅரசியல் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளும், அமைச்சர்களும் மற்றும் பிரதிஅமைச்சர்களும் முண்டியடித்துக் கொண்டு ஊடகங்களுக்கு கண்டன அறிக்கைகள் விடுவதையும், நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திற்கும், அமைச்சுச் செயலாளர்களுக்கும் கடிதங்கள் எழுதுவதனையும், அல்லது எழுதுவதாக காட்டிக் கொள்வதனையுமே தமது உச்ச கடமையாகக் கருதிச் செயற்பட்டுவருகின்றனர்.
இவ்வாறு ஊடகங்களின் மூலமாக தமது கண்டனங்களைத் தெரிவிப்பதும், கடிதங்கள் எழுதி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோருவதுமானது அமைச்சரவையில் அல்லது பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவதற்கு சந்தர்ப்பம் பெற்றிராத சமய,சமூகநிறுவனங்களின் பிரதிநிதிகளும் செய்யக்கூடிய பணியேயன்றி அரசஅதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யவேண்டிய தலையாய கடமையல்ல,
மகியங்கனை பள்ளிவாசல் சம்பவம் தாக்குதலுக்குள்ளானது கண்டனத்திற்குரியதும்,சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டியதுமாகும் என்பதில் எந்தவொரு முஸ்லிமுக்கு மாத்திரமல்ல, இந்த நாட்டின் இன ஐக்கியத்தையும், சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் நேசிக்கின்ற இந்நாட்டின் நிரந்தரசமாதானம் பற்றி அக்கறை கொண்டுள்ள எந்தவொரு மனிதாபிமானமுள்ள பிரஜைக்கும் இதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.
அந்தவகையில் எமது இயக்கமும் இந்ததாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறது. தொடர்ந்தேர்ச்சையாக நடந்துவரும் இதுபோன்ற இனவாத வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த தவறிவரும் அரசாங்கமே இச்சம்பவத்திற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளவேண்டும். அத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டுநாட்டில் இவ்வாறான இன-மதவன்முறைச் சம்பவங்கள் சங்கிலித் தொடராக நடைபெற்றுவரும் மோசமான நிலைமைக்கு இனிமேலாவது முற்றுப் புள்ளிவைக்கவேண்டும் என்பதையும் எனவும் எமது இயக்கம் வலியுறுத்துகின்றது.
இந்தவேளையில் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நீர்கொழும்பு புதியநீதிமன்றவளாகத் திறப்பு விழாநிகழ்வில் கலந்துகொண்டபோது மஹியங்கனைத் தாக்குதல் விடயத்தைக் கேள்வியுற்று அதுதொடர்பில் நடவடிக்கைஎடுக்கப்படும் எனத் தெரிவித்திருப்பதானது முஸ்லிம் சமூகத்திற்கு சற்றுஆறதலாக இருந்தாலும் இது போன்று நாட்டில் சமாதானத்திற்கு சேதத்தை உண்டுபண்னும் இனவாதவன்முறைச் சம்பவங்களை பகிரங்கமாகக் கண்டிக்காமல் தொடர்ந்தும் மௌனம் காப்பது கவலையையும் விரக்தியையும் தருகிறது.
தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டது பற்றி எமது அரசாங்கத்தில் இருக்கும் எந்தவொரு அமைச்சரும் தன்னிடம் தெரிவித்திருக்கவில்லை என கல்முனையில் நடைபெற்ற கிழக்குமாகாணசபைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பகிரங்கமாகத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், மஹியங்கனைப் பள்ளிவாசல் தாக்கப்பட்டது பற்றி அவரின் அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் எத்திவைத்த பின்னரும் அதனைக் கண்டிக்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றளவில் தெரிவித்திருப்பது பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு முழமையான ஆறுதலை அளிக்கமுடியாது என்பதனை நாம் சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியாது.
இச்சம்பவம் தொடர்பில் நடவடிக்கைஎடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்ததன் பின்னரே அரசதரப்பு முஸ்லிம் அரசியல் வாதிகள் சிலர் பாதுகாப்பு அமைச்சின் செயலாலளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு நடவடிக்கை எடுக்குமாறும், சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யுமாறும் அவசரக் கடிதங்களை அனுப்பியிருப்பதாக ஊடகங்கள் மூலம் அறிக்கைவிட்டிருக்கிறார்கள்.
முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளைக் காயப்படுத்தும் இது போன்ற பிரச்சினைகளுக்கு தமக்கிருக்கும் மக்கள் ஆணையைப் பயன்படுத்தி நிரந்தரத் தீர்வுகளைக் காண்பதற்குபதிலாக முஸ்லிம் சமூகத்தில் தமக்குஏற்பட்டுவரும் அரசியல் செல்வாக்கு சரிவினை சரிசெய்வதற்கான கண்துடைப்பு நடவடிக்கைகளாகவே இந்தஅறிக்கைகளை பார்க்கவேண்டியுள்ளது.
இதேவேளை கடந்த 13ம் திகதி சனிக்கிழமை கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிihயில் நடைபெற்ற கிழக்குமாகாண சபை நெருக்கடி சம்பந்தமாக ஆராயும் கூட்டத்தில் மஹியங்கனைபள்ளிவாசல் தாக்குதல் தொடர்பாக முஸ்லிம் அமைச்சர்கள் பிரஸ்தாபித்தபோது, நீங்கள் யார் மீது சந்தேகப்படுகின்றீர்கள்? என ஜனாதிபதி அவர்களிடமே திருப்பிக் கேட்டிருப்பதானது ஏற்றுக் கொள்ளக்கூடியஒன்றல்ல. ஏனெனில் கடந்த ஒருவருடத்திற்குமேலாக இந்நாட்டில் அப்பட்டமான இன மத துவேசங்களை கிழப்புபவர்கள் யார்? இந்த அமைப்புகளை முன்நின்று நடாத்துபவர்கள் யார்? இவர்கள் இதுவரை என்ன என்ன சட்டவிரோத நடவடிக்கைகளிலும் இனவாதவன்முறைசம்பவங்களிலும் இன நல்லுறவை சீர்குலைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருகிறார்கள் என்பதெல்லாம் இந் நாட்டின் சிறுபிள்ளைகளுக்கும் தெரிந்த அப்பட்டமான உண்மைகளாகும்.
மேலும், இந்தநாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களையும், பயங்கரவாதச் செயற்பாடுகளையும், தேசவிரோத நடவடிக்கைகளையும் கண்டறிய ஜனாதிபதி தலைமையிலான பாதுகாப்புஅமைச்சின் கீழ் பல இலட்சம் பொலீசாரும், இராணுவத்தினரும், தேசியபுலனாய்வு அதிகாரிகளும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்நிலையில் மஹியங்கனை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் யார்? என ஜனாதிபதியவர்கள் திருப்பிக் கேட்டிருப்பதானது இப்பிரச்சினைகளை முடிவுக்கக் கொண்டுவருவதில் இந்த அரசாங்கம் இன்றுவரை நேர்மையான அக்கறையுடன் செயற்பட தயாராக இல்லை என்பதனையே காட்டுகிறது.
எனவே இன்னமும் நமதுசமூகத்தின் அரசியல் தலைமைகள் என்றும்,மக்களின் பிரதிநிதிகள் என்றும் சொல்லிக் கொண்டு சொகுசுவாழ்க்கையில் இருப்பவர்கள் இவ்வாறான சமூகத்திற்கெதிரான செயற்பாடுகள் குறித்து வைபவரீதியானவிழாக்களிலும், சம்பந்தமில்லாத கலந்துரையாடல்களிலும் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்காமலும், கடிதங்களை எழுதியிருப்பதாக ஊடகங்களில் பம்மாத்துக் காட்டாமலும் மக்களுக்கும், சமூகத்திற்கும் விசுவாசமாகக் குரல் கொடுக்கவேண்டிய அதிகாரபூர்வத் தளங்களான பாராளுமன்றத்திலும்,அமைச்சரவையிலும் இச்சம்பவங்களை பகிரங்கமாகக் கண்டிக்கவேண்டும்;.
இந்நாட்டின் சட்டத்தையும்,ஒழுங்கினையும் நிலைநாட்டி இவ்வாறான இனவாத சம்பவங்களை முடிவுக்குக் கொண்டுவருவதில் தமதுகடமையை இதுவரைசெய்யாமல் பொறுப்பற்றுச் செயற்படும் அரசாங்கத்தின் போக்கினை இவர்கள் சுட்டிக்காட்டவேண்டும்.
கிழக்கு மாகாணசபையில் இருக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளின் பலம் இப்பிரச்சினைகளுக்கு முற்றுப்பள்ளிவைப்பதற்கான அரசியல்துரும்பாக உபயோகப்படுத்துவதற்கு இனிமேலாவது சகல முஸ்லிம் கட்சிகளும் முன்வரவேண்டும்.
அதுவே மக்கள் ஆணையைப் பெற்ற அரசியல் கட்சிகள் இக்கட்டான காலகட்டத்தில் எமதுமக்களுக்குஆற்றவேண்டியஅடிப்படைக் கடமைஎன்பதனைஎமது இயக்கம் சுட்டிக்காட்டவிரும்புகின்றது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
