மட்டக்களப்பில் ஊடகவியலாளரின் மோட்டார் சைக்கிளை கொள்ளையிட்டுச்சென்ற பிரபல சைக்கிள் கொள்ளையர் விபத்துக்குள்ளான நிலையில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பின் ஊடகவியலாளரான வரதன் தனது மோட்டார் சைக்கிளில் உள்ள சில்லில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக திருமலை வீதியில் உள்ள திருத்த நிலையத்தில் மோட்டார் சைக்கிளை கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் மீண்டும் வந்து தனது மோட்டார் சைக்கிளைக்கேட்டபோது சைக்கிள் காணாமல்போன சம்பவம் தெரியவந்துள்ளது.
உடனடியாக குறித்த சைக்கிள் திருத்தும் நிலையத்துக்கு முன்பாகவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ளவர்களிடம் கேட்டபோது போக்குவரத்து பொலிஸார் மோட்டார் சைக்கிள் ஒன்றை கட்டியிழுத்துச்செல்வதாக கூறியபோது உடனடியாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு சென்றபோது சைக்கிள் பொலிஸ் நிலையத்தில் இருப்பது தெரியவந்தது.
மகிழவட்டவானை சேர்ந்த இளைஞர் ஒருவர் சைக்கிளை திருடிக்கொண்டு வேகமாக சென்றபோது திருமலை வீதியில் வேறு ஒரு மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டுள்ளது.
இதன்போது சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளதுடன் சைக்கிளை ஓட்டிச்சென்றவரும் சிறுகாயங்களுக்கும் உள்ளாகியுள்ளார்.குறித்த நபர் தலைக்கவசம் இல்லாது சென்ற காரணத்தினால் சந்தேகம்கொண்ட போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது சைக்கிள் திருடப்பட்ட சம்பவம் தெரியவந்துள்ளது.
இதன்போது குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதுடன் சைக்கிளும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர் பல சைக்கிள் கொள்ளைகளுடன் தொடர்புபட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
