கல்வி நிலை தொடர்பில் சிந்திக்கவேண்டிய தருணம்…….கட்டுரை

(மட்டு.நகரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி நிலை மிகவும் பின்தங்கிய நிலையில் செல்வதைக்காணக்கூடியதாகவுள்ளது.மாணவர்கள் மத்தியில் ஒழுக்க சீர்கேடு அதிகரித்துவரும் நிலையில் கல்வி நிலையிலும் பாரிய வீழ்ச்சியேற்பட்டுள்ளமையானது எமது சமூகத்துக்கு ஆரோக்கியமான விடயம் இல்லை.இந்த நிலை தொடருமானால் கல்வியில் பின்னடைவு எமது சமூகத்தினை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லக்கூடிய அபாய நிலை தோன்றியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் கடந்த கால யுத்தத்தினை நாங்கள் தொடர்ந்து கோடிட்டுக்காட்டிக்கொண்டு பழையனவற்றையே இன்னும் பேசிக்கொண்டிருக்கும் நிலையையே காணமுடிகின்றது.நாங்கள் எமது சமூகம் சிந்திக்கும் நிலை மிகவும் குறைந்துவருவதும் இந்த கல்வி வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக அமைகின்றது.

ஒரு சமூகத்தின் அபிவிருத்தியின் அளவுகோலாக இருக்கும் கல்வி நிலையை உயர்த்துவதற்கு அந்த சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் பாடுபடவேண்டியது மிகவும் முக்கியமாகவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி நிலை தொடர்பில் சிந்திக்கும் நிலை மிகவும் கவலைக்குரிய விடயமாகவே உள்ளது.

குறிப்பாக சொல்லப்போனால் ஒவ்வொரு பாடசாலைகள் தொடர்பிலும் மிகுந்த அவதானங்களை நாங்கள் கொண்டிருக்கவேண்டிய நிலையில் இருக்கின்றோம்.இன்று ஒரு பாடசாலையில் இருந்து பல்வேறு துறைகளில் வெளியேரும் கல்வியியலாளர்கள் அதன் பின்னர் தாம் கற்ற பாடசாலை தொடர்பிலான அக்கரையை காண்பிக்கும் நிலை மிகவும் குறைவாகவே உள்ளது.

அண்மையில் மட்டக்களப்பின் பிரபல பாடசாலை ஒன்றின் விளையாட்டு போட்டி நிகழ்வில் செய்தி சேகரிக்கச்சென்றபோது அங்கு இறுதியில் இடம்பெறும் பழைய மாணவருக்கான நிகழ்வில் ஒரு பழைய மாணவரும் கலந்துகொள்ளவில்லை.அந்த நிகழ்வில் கலந்துகொள்ளவும் இல்லை.இது மிகவும் கவலையளிக்கும் விடயமாகும்.அந்த பாடசாலையில் இருந்து உலகலாவிய ரீதியில் பெருமைபெற்றவர்கள்,மட்டக்களப்பின் பல திணைக்களங்களின் தலைவர்களாக இன்று அலங்கரித்துக்கொண்டிருக்கும்போது அந்த நிகழ்வில் ஒருவரையேனும் காணமுடியவில்லை.

இந்நிகழ்வுகளில் அவர்கள் கலந்துகொள்வதானது அந்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் உங்களை பின்பற்றி கல்வியில் சிறக்கவேண்டும் என்பதாகும்.அதுமட்டுமல்ல தனது பாடசாலையின் கல்வி நிலை தொடர்பில் அக்கரையற்ற நிலையிலேயே காணப்படுகின்றது.எனினும் சிலர் இதற்கு விதிவிலக்காக செயற்படுவதைக்காணலாம்.

எமது மாவட்டம் கல்வி நிலையில் உச்சக்கட்டத்தினை அடையவேண்டுமாகவிருந்தால் மாணவர்களின் பின்னால் ஊக்கம் வழங்கிக்கொண்டிருக்கும் வகையில் நாங்கள் செயற்படவேண்டும்.எமது மாவட்டத்தில் இறுதியாக அமைக்கப்பட்ட கல்வி வலயமாக கருதப்படும் மட்டக்களப்பு மத்தி முஸ்லிம் கல்வி வலயம் இன்று தேசிய ரீதியில் சாதனைபடைத்து நிற்பதற்கு மிகவும் முக்கிய காரணமாக அமைவது அங்குள்ள பாடசாலைகளில் படித்த பழைய மாணவர்களின் செயற்பாடாகும்.

அதுமட்டுமன்றி முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள ஒவ்வொரு பாடசாலை தொடர்பிலும் அந்த மக்கள் சிறந்த திட்டமிட்ட வகையில் ஒன்றுபட்டு செயற்படுவதே காரணமாகும்.அதுமட்டுமன்றிஅ ங்குள்ள கல்விச்சமூகமும் தமது பாடசாலையின் வளர்ச்சி தொடர்பில் கூடிய கரிசனையுடனும் செயற்படுவது அந்த பாடசாலைகளின் வெற்றிக்கு பிரதான காரணமாக அமைகின்றது.

இந்தவேளையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி வீழ்ச்சிக்கு பெற்றோரின் கவனக்குறைவும் மிகவும் முக்கிய காரணமாக அமைகின்றது.ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைவதற்காக பெற்றோர் எடுக்கும் முயற்சியை ஏனைய தரங்களில் காட்டமுற்படுவதில்லை.அத்துடன் தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர்களின் பாடசாலை செயற்பாடுகளிலும் ஒரு தரத்துக்கு பின்னர் பெற்றோர் கவனம் செலுத்தாமை இன்று பாரிய குறைபாடாக மாறியிருக்கின்றது.

அதிகளவான பணப்பறிமாற்றங்கள்,கையடக்க தொலைபேசிகளின் பாவனை,கணிணிகளின் பாவனைகள் காரணமாக மட்டக்களப்பில் உள்ள பல பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மிகவும் மோசமான முறையிலே பாதிக்கப்படுகின்றன.இதனை தடுக்கவேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கின்றது.

எனவே எதிர்வரும் காலங்களில் இந்த மாவட்டத்தில் உள்ள அனைவரும் ஒரு கூட்டுப்பொறுப்புடன் எமது மாணவர்களின் எதிர்காலம்,மாவட்டத்தின் எதிர்காலம் தொடர்பில் சிந்திக்காவிட்டால் நாங்கள் எமது அனைத்தையும் இழந்து நாதியற்றவர்களாகவேண்டிய துர்ப்பாக்கிய நிலையே ஏற்படும்.