வாழைச்சேனை மீன்பிடிதுறைமுக முகாமையாளரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

(கல்குடா செய்தியாளர்)

வாழைச்சேனை பிரதேச படகு உரிமையாளர்கள்; எரி பொருள் மானியம் பெறுவதில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்ப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன மேற்கொண்ட நடவடிக்கையை வாழைச்சேனை மீன் பிடித்துறைமுக முகாமையாளர் ஏற்றுக் கொள்ள மறுத்த காரத்திணால் படகு உரிமையாளர்கள் இன்று (18.07.2013) மீன் பிடித்துறைமுக முகாமையாளருக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாழைச்சேனை முஹைதீன் ஜூம்ஆப் பள்ளிவாயலில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து பள்ளி வாயல் முன்றலில் இருந்து வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகம் வரை சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மட்டக்களப்பு, தொகுதி அமைப்பாளரும் ஏறாவூர் நகர பிதாவுமான அலி ஸாஹிர் மௌலானா, கடற்றொழில் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் டொமினின்கோ ஜோர்ஜ், மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் சம்மேளன தலைவர் ஏசி.எம்.முனவ்வர் மற்றும் அதிகாரிகளிடம் கடற்தொழில் நீரியல் வளங்கள் அமைச்சருக்கான மகஜரின் பிரதியை கையளித்தனர்.

அரசாங்கத்தினால் மீனவர்களுக்காக வழங்கப்பட்ட மாதாந்த எரிபொருள் மானியத் திட்டத்தில் வழங்கப்படும் முத்திரையில் மார்ச் மாதத்திற்குறிய மானிய முத்திரை இரண்டு மாதங்கள் தாமதித்துக் கிடைத்ததால் அதில் எரிபொருள் பெருவதில் சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து படகு உரிமையாளர்கள் மீன்பிடி அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடிய போது அதை வழங்குவதற்கு வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக முகாமையாளருக்கு எழுத்து மூலம் அறிவித்தும் பயன் கிடைக்காததால் இன்று (18.07.2013) படகு உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தை நடாத்தியதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் சம்மேளன தலைவர் ஏசி.எம்.முனவ்வர் தெரிவித்தார்.

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக முகாமையாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள ஆர்ப்பாட்டகாரர்கள் குறித்த முகாமையாளரை உடனடியாக இடமாற்றுமாறும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மட்டக்களப்பு, தொகுதி அமைப்பாளரும் ஏறாவூர் நகர பிதாவுமான அலி ஸாஹிர் மௌலானா ஆர்ப்பாட்டக்காரர்கள் முன் கருத்துத் தெரிவிக்கையில்,

மீன்பிடி அமைச்சரோடும் அமைச்சின் அதிகாரிகலோடும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைத்துள்ளேன் மார்ச் மாத டீசல் மானிய முத்திரையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்த்துத் தருவதோடு வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக முகாமையாளரினால் படகு உரிமையாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைக்கும் தீர்வு பெற்றுத் தருவதாக உறுதியளித்ததைத் தெடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.