மரக்கறிகளை சோதனைக்குட்படுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் அறிவுறுத்தல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மரக்கறி வகைகளை எழுமாற்றான பரிசோதனைகளுக்குட்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மரக்கறிகளின் உற்பத்தி நடவடிக்கைகளின் போதன இரசாயனப் பாவனையைக் குறைப்பதற்காக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட வைத்திய, சுகாதாரத் துறை தொடர்பில் நேற்றைய தினம் மாவட்ட செலயகத்தில் நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்திலேயே அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.

நஞ்சுத்தன்மையான மரக்கறி வகையில் விற்பனைகளை கட்டுப்படுத்துவதற்கு பதிவு செய்யப்பட்டவர்கள் மாத்திரமே விநியோகத்தில் ஈடுபட முடியும் என்ற கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படல் நல்லது. மர்கறி வகைகளுக்கு அனுமதிக்கப்பட்ட அளவுகளை விடவும் அதிகமான அளவுகளில் கிருமி நாசினிகள் பயன்படுத்தப்படுவது கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

இந்தக்கட்டுப்படுத்தல்களை விவசாய, கமநல உத்தியோகத்தர்கள் மேற்கொள்ள வேண்டும். அதே நேரம், மரக்கறிகளின் நச்சுத் தன்மைகள் குறித்து சுகாதார சேவைகள் பிரிவு பரிசோதனைகளை மேற்கொள்ள வெண்டும. இதன் மூலம் மக்கள் உணவுக்குப் பயன்படுத்தக் கூடியதான நிலைமையை உருவாக்குதல் வேண்டும்.

இரசாயனக் கலவைகளால் மாவட்டத்தில் புற்றுநோய்கள் அதிகரித்து வருவதாகவும் இன்னும் பல நோய்களுக்குக் காரணமாக இருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. இந்த வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதல் சிறப்பானதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

 நேற்றைய தினம் பகல் குடும்ப சுகாதார நிலையத்தின் அனுசரணையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய சுகாதார நிலைமை, அதிலுள்ள குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு அதனை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.