கிராம புறங்களில் பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான ஆசிரியர் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமப்புறப்பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான, ஆங்கில மற்றும் தகவல் தொழில்நுட்பப் பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கான தட்டுப்பாட்டை நீக்கும் வகையிலான விசேட கலந்துரையாடல் வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில், மாவட்டச் செயலாளர் மற்றும் உபவேந்தர் ஆகியோரின் கூட்டுத் தலைமையில் நடைபெற்றது.

நேற்றைய தினம், நடைபெற்ற கல்வித்தர மேம்பாடு தொடர்பிலான இக் கலந்துரையாடலை கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்னன் கோபிந்தராஜா, மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோர் தலைமையேற்று நடத்தினர்.

இதில், கிழக்குப் பல்கலைக்கழகம் சார்பில்,  பதிவாளர் கே.மகேசன், கலைபீட பதில் பீடாதிபதி எம்.ரவி, முகாமைத்துவ பீடாதிபதி என்.லோகேஸ்வரன், விவசாய பீட பதில் பீடாதிபதி பி.சிவராஜா, விஞ்ஞான பீட பீடாதிபதி கலாநிதி திருமதி முத்துலட்சுமி வினோபாவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செயலகம் சார்பில், மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்சிழியன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா ஆகியோரும் கல்வி வலயங்களின் திட்டமிடல் உத்தியோகத்தர்களும், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களான யுனிசெப், யு.என்.டி.பி ஆகியவற்றிப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கிராமப்புறப் பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான, ஆங்கில மற்றும் தகவல் தொழில்நுட்பப் பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கான தட்டுப்பாடு காரணமாக திறமையான மாணவர்கள் கூட குறிப்பிட்ட இப்பாடங்களில் தமது பெறுபேறுகளைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலைமையில் மாற்றத்தினை ஏற்படுத்தும் நோக்கிலேயே இக் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது என உபவேந்தர் கிட்னன் கோபிந்தராஜா தெரிவித்தார்.

அந்த வகையில், கீழ் மட்டத்திலுள்ள கல்வித்தரத்தினை உயர்த்துவதற்கு கிழக்குப் பல்கலைக்கழகம் எவ்வாறு பங்களிப்புச் செய்யமுடியும் என்ற வகையில் இக் கலந்துரையாடல் நடத்தப்பட்டு இணைப்புக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறுங்கால நீண்ட காலத்திட்டங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் மாதத்தில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களை இலக்காகக் கொண்ட குறுங்காலத்திட்டத்தில், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டில் கற்கும் மாணவர்களைக் கொண்டு தொண்டர் அடிப்படையில் விசேட வகுப்புக்களை நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இத் தொண்டர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடுகளுடன் உதவிக் கொடுப்பனவுகளும் வழங்குவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக அரசாங்க அதிபர் ஏற்பாடுகள் செய்யவுள்ளார். அதற்காக வலயக் கல்வி அலுவலகங்களிடமிருந்து ஆசிரியர்கள் தேவைகள் குறித்து அறிக்கைள் கோரப்பட்டுள்ளன.

அதே நேரம் நீண்டகாலத்திட்டத்தில், பல்கலைக்கழக தகமை பெற்றும் தெரிவு செய்யப்படாத மாணவர்கள், கல்விக் கல்லூரிகளில் கற்கைகளை நிறைவு செய்தவர்கள், போன்றவர்களை வெளிவாரியாக கணித, விஞ்ஞான, ஆங்கில மற்றும் தகவல் தொழில்நுட்பப் பாடங்களுக்கான தகமை பெற்ற பட்டதாரிகளாக்குதல் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்கான பூர்வாங்க வேலைகளை கிழக்குப் பல்கலைக்கழகம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அதற்கான பாடவிதானங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்த அனுமதிகள் கிடைத்தவுடன் இதற்கான வேலைத்திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என உபவேந்தர் கிட்னன் கோபிந்தராஜா தெரிவித்தார்.