மட்டக்களப்பு மாமாங்கம் சகாயபுரம் பங்கு அருட்தந்தை இக்னேஸ் ஜோசப் அடிகளார் தமது குருத்துவ பணி வாழ்வில் 25ஆண்டுகள் நிறைவு செய்து, வெள்ளி விழாவை தமது பங்கு மக்களுடன் இன்று 28.07.2013 வெள்ளி விழா விசேட திருப்பலியுடன் சிறப்பாக கொண்டாடினார் .
அருட்தந்தை இக்னேஸ் ஜோசப் அவர்கள் சொறிக்கல்முனையைச் சேர்ந்த அருளன் இன்னாசி -செபமாலை தம்பதிகளின் புதல்வர் ஆவார் .
தமது ஆரம்பக் கல்வியை சொறிக்கல்முனை திருச்சிலுவை றோமன் கத்தோலிக்க பாடசாலை மற்றும் கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியிலும் பெற்றுக் கொண்டார் .
குருத்துவ நிலைக்கான மெய்யியல் மற்றும் இறையியல் கற்கை நெறிகளை தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி தூய பவுல் குருமடத்தில் 1981 - 1988 நிறைவு செய்தார்.
சிறப்பு பயிற்சிகளாக சென்னையில் "இளையோர் ஆற்றுப்படுத்தல் " பயிற்சியும் , பெங்களூரில் மறைக்கல்வி மற்றும் குடும்ப ஆன்மீகம் பற்றிய பயிற்சி நெறிகளையும் நிறைவு செய்தார் .
ஆயித்தியமலை ,வந்தாறுமுலை , செங்கலடி , இருதயபுரம் , புளியந்தீவு போன்ற பணித்தலங்களில் பயிற்சி பெற்று , 1988ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி தூய மரியாள் இணைப்பேராலயத்தில் "தியாக்கோனாக " உயர்த்தப்பட்டார் .
1988ஆம் ஆண்டு ஆடி மாதம் 28ஆம் திகதி சொறிக்கல்முனை திருச்சிலுவை ஆலயத்தில் ஆயர் கிங்;ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையால் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு தனது முதல் திருப்பலியை சொறிக்கல்முனை ஆலயத்தில் ஆடி 29ஆம் திகதி ஒப்புக்கொடுத்தார் .
புளியந்தீவு இணைப்பேராலயத்தில் உதவிப்பங்குத்தந்தையாக 15.08.1988-15.05.1991 வரை பனியாற்றினார் . 1991 -1995 வரை பெரிய கல்லாறு ஆலயத்திலும் 1995 -1999 வரை கல்முனை ஆலயத்திலும் , 1999 -2006 வரை புளியந்தீவு இணைப்பேராலயத்திலும் , 2006 -2012 வரை தாண்டவன்வெளி பங்கிலும் பனியாற்றினார் . தற்போது 2012 சகாயபுர பணித்தளத்தில் பணிபுரிந்து வருகிறார் .