இராவணன் வழிபட்ட ஆலயமாக கருதப்படும் ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயமானது மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்ததாக காணப்படுகின்றது.
மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஒருங்கே கொண்டு அருளாட்சி புரிந்துவரும் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு நேற்று கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு இடம்பெற்றது.
மட்டக்களப்பு நகரில் உள்ள வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
இன்று காலை விநாயக வழிபாடுகளுடன் பூசைகள் ஆரம்பமாகி விசேட யாக பூசை இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள விநாயகப்பெருமானுக்கு பூசைகள் இடம்பெற்றன.
கொடிச்சீலைக்கு விசேட பூசைகள் செய்யப்பட்டு கொடிச்சீலை ஆலயத்தில் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு தம்பத்துக்கொண்டு கொண்டுவரப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தம்பத்துக்கு பூசைகள் செய்யப்பட்ட வாத்தியங்கள், மேளதாளங்கள்,தேவபராயனங்கள் முழங்க கொடியேற்றம் செய்யப்பட்டது.
கொடியேற்றத்தினை தொடர்ந்து கொடித்தம்பத்துக்கு அபிஷேகம் மற்றும் பூசைகள் செய்யப்பட்டு சுவாமி ஊர்வலம் இடம்பெற்றது.
இந்த உற்சவத்தில் நாடெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது அன்னதான சபையினரால் அன்னதானங்களும் வழங்கப்பட்டன.