மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகளில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் விவசாய மேம்பாட்டுத்திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.


மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களனா பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன், மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம்,துரைராஜசிங்கம் ,விவசாய மற்றும் நீர்பாசன திணைக்களங்களின் தலைவர்கள் பிரதேச செயலாளர்கள்,திட்டமிடல் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தனவிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் வெள்ள அனர்த்தங்களின்போது பாதிக்கப்பட்ட கால்வாய்கள் மற்றும் குளங்களை புனரமைத்தல் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வைப்பெற்றுக்கொடுத்தல் ஆகியவை தொடர்பில் ஆராயப்பட்டது.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புனரமைக்கப்படாத நிலையில் உள்ள பிரதான நீர்ப்பாய்ச்சல் குளங்களை புனரமைத்து விவசாய நடவடிக்கைகளை அதிகரிப்பது தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது.

கடந்த காலத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள விவசாய நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மட்ட்களப்பு மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகளில் காலநிலை சீர்கேட்டினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலன்கள் தொடர்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மேலதிக அரசாங்க அதிபர் பாஸ்கரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கமுடியும்.அதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.