(பேராசிரியர் சி. மௌனகுரு)
தொன்மங்கள்
ஒரு சமூகத்தினை இனத்தினை அல்லது ஓர் இனக்குழுமத்தினை அறிந்து கொள்ள அவற்றின் பண்பாடு நடத்தை உளவியல்களைப் புரிந்து கொள்ள அச்சமூகத்தின் இனத்தின் அல்லது இனக்குழுமத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள தொன்மங்கள் (Myths) உதவுகின்றன.
தொன்மம் என்பதற்கு இயற்கை அல்லது வரலாற்றுக்கூறு தொடர்பான செய்திகளை உட்கொண்டதும் இயற்கையிகந்த செயல் நிகழ்ச்சி பற்றியதுமான பொய்யான புனைந்துரை என்று வரைவிலக்கணம் தரப்படுகின்றது. பொய்யான புனைந்துரையாயினும் அதற்குள் அச்சமூகத்தின் வரலாறு இயற்கை பற்றிய அச்சமூகத்தின் நோக்கு என்பன ஆழமாகப் புதைந்து கிடக்கும். இப்புனைந்துரைகள் அரசர் பற்றியும் இருக்கும் தெய்வம் பற்றியும் இருக்கும். அரசர் பற்றி வருவனவற்றை பழமரபுக் கதைகள் (Legends) என்றும் தெய்வம் பற்றியுள்ளவற்றை தொன்மங்கள் (Myths)என்றும் குறிப்பிடுவர்.
இத்தொன்மங்கள் மிகப் பழமையானவை சமூகத்தின் அடிமனதில் ஆழப்பதிந்தவை. ஆச்சமூகத்தை உள்நின்றியக்கும் சக்திவாய்ந்தவை. உண்மையைவிடத் தொன்மம் சக்தி வாய்ந்தது. (myth
Is Powerful Than truth) என்பர் தொன்மத்துக்கான உயிரைக் கூடக் கொடுப்பர்.
இத் தொன்மங்கள் வாய்மொழியாகவும் வழக்கிலிருக்கும்.
இத்தொன்மங்கள் பற்றிய ஆய்வு பண்டைய சமூகத்தின் கூட் டு மனதை,அச்சமூகத்தின் உளவியலை அச்சமூகம் இயங்கிய முறைமைகளைப் புரிந்துகொள்ள உதவுவன மாத்திரமன்றி,அச்சமூகத்தின் இன்றைய செயற்பாடுகளையும் புரிந்து கொள்ள உதவுபவை
தொன்மயியல்
தொன்மயியல்என்றஒருஆய்வுநெறியுண்டு.மேற்குநாட்டுப்பல்கலைக்கழகங்களில் இது உண்டு.
தொன்மம் சம்பந்தமான ஆய்வுகள் பண்டைக்காலத்திலிருந்தே ஆரம்பித்து
விட்டன
கிரேக்க காலத்தில் வாழ்ந்த சோக்கிரட்டீஸ் போன்றோர் இதன் முன்னோடிகள்
19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இது ஒரு கல்வி நெறியாக உருவாகியது.E.P.Tailor>Max
Mullar>James Frazer போன்ற அறிஞர்கள் இதன் முன்னோடிகளாவர்.
20ஆம்நூற்றாண்டில் இத்தொன்மவியலானதுஉளவியல்,மானிடவியல்,சமூகவியல் துறைகளோடு சேர்த்துப் பார்க்கப்பட்டு பெருவளர்ச்சி பெற்றது. .Carl
Yong> Joseph Campbell> Lavistraus> Ronald Barth> Sigman Fraid போன்றோர் இதில் பெரும் பங்காற்றினார்
உலகின் பண்டைய,இன்றைய சமூகங்களின் தன்மைகளையும் அவற்றின் கூட்டு உளவியலையும் நம்பிக்கைகளையும் வாழ்க்கை முறைககளையும் புரிந்து கொள்ள இக்கல்வியும்,ஆய்வுகளும் துணைபுரிகின்றன
இதிலிருந்து ஒப்பீட்டு தொன்மவியல்(Comparative
Mythology) என்ற ஆய்வு நெறியும் உருவானது.
இன்றைய ஆய்வாளர்கள் இன்று சமூகத்திடையே நடக்கும் முரண்பாடுகள் பிரச்சனைகளுக்கான மூலங்களையும் தீர்வுகளையும் அச்சமூகங்களின் தொன்மங்களுக்குள் தேடுகின்றனர்.
தமிழர் மத்தியில் உள்ள தொன்மங்கள் இத்தகைய ஆய்வுகளுக்குள் பெரும்பாலும் இன்னும் உட்படுத்தப் படவில்லை.
மேற்கு நாட்டவர்கள்தான் ஒருசில ஆய்வுகள் செய்துள்ளனர்
எழுத்து மொழியிலிருக்கும் தொன்மங்கள் வாய்மொழியாக இருந்து எழுத்து மொழி பெற்றனவேயாம். இராமாயண, மகாபாரத, கண்ணகி தொன்மங்கள்
தமிழர் மத்தியிலே இராமாயணம் மகாபாரதம் புராணங்கள் போன்ற வடநாட்டுத் தொன்மங்களும் மாரியம்மன், காளியம்மன், காத்தவராயன், கண்ணகி அம்மன் போன்ற தமிழ் நாட்டுத் தொன்மங்களும் வழக்கிலுள்ளன. தமக்கெனத் தனித்துவமான பண்புகளை இத் தமிழ்த் தொன்மங்கள் கொண்டிருப்பினும் வரலாற்றோட்டத்தில் இவை வடநாட்டுத் தொன்மங்களுடன் இணைக்கப்பட்டும் பிணைக்கப்பட்டும் வளர்த்தெடுக்கப்பட்டும் வந்துள்ளன. தமிழ் நாட்டுத் தொன்மமான முருகனை கார்த்திகேயனுடன் இணைத்தமை இதற்குச் சிறந்த உதாரணமாகும். இவ்விணைப்பு சங்ககாலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டும் விட்டது.
தமிழகத்திலும் கேரளாவிலும் இலங்கைவாழ் சிங்கள தமிழ் மக்கள் மத்தியிலும் ஆழவேரூன்றியுள்ள ஒரு தொன்மமாக நாம் கண்ணகி கதையினைக் கருதலாம்.
இத் தொன்மத்திற்கு ஒரு நீண்ட வரலாறுன்டு. வாய் மொழியாக வழக்கிலிருந்த ஒரு முலை இழந்த பெயர் தெரியாத ஒரு பெண்ணின் கதை 'ஒரு முலையறுத்த திருமாவுண்ணி' என்று சங்க இலக்கியமான நற்றிணையில் பதிவு செய்யப்பட்டு அது பின் சிலப்பதிகாரமாக அலர்ந்து, கண்ணகி வழக்குரையாக மலர்ந்த ஒரு பெரும் வரலாறு இக்கண்ணகி தொன்மத்துக்குண்டு.
சிங்கள மக்கள் மத்தியில் பத்தினித் தெய்யோ எனவும் வடபகுதி மக்களிடையே (முல்லைத்தீவு) அம்மாளாச்சி எனவும் கிழக்கிலங்கைத் தமிழ் மக்களிடையே கண்ணகை அம்மன் எனவும் அழைக்கப்படும் இத் தெய்வம் பற்றிய தொன்மங்கள் பற்றி பேராசிரியர் கணநாத் ஒபயசேகர செய்த ((The Cult Of The Goddess Pattini> 1984) என்ற ஆய்வே இ துவரை ஓர் ஆதாரபூர்வமான ஆழமான ஆய்வாகத் திகழ்கின்றது.
கிழக்கிலங்கையின் கண்ணகையம்மன்
கிழக்கிலங்கையின் கண்ணகையம்மன் பற்றி வீ. சி. கந்தையா, எவ். எக்ஸ். நடராஜா, சற்குணம், பேராசிரியர் கணபதிப்பிள்ளை, மகிழைமகேசன், வெல்லவூர்க் கோபால், வினாயகமூர்த்தி,ஈழத்துப் பூராடனர், சிவசுப்பிரமணியம் போன்றோர் சிற்சில கட்டுரைகள் ஆங்காங்கு எழுதினரேனும் ஆழமான ஆய்வுகள் இன்னும் கிழக்கிலங்கைக் கண்ணகை அம்மன் பற்றிச் செய்யப்படவில்லை. ஆய்வாய்வாளரை அல்லது ஆய்வாளர்களை கிழக்கிலங்கை எதிர்பார்த்திருக்கின்றது. இந்நிலையில் ஆய்வின் முதற்படியாக கிழக்கிலங்கையின் கண்ணகை அம்மன் பற்றிய செய்திகளும் கதைகளும் வழிபாட்டு முறைகளும் பாடல்களும் தொகுக்கப்படுதல் அவசியமான ஒரு செயலாகும்.
கிழக்கிலங்கை பெண் தெய்வ வழிபாட்டினை இன்னும் ஆழமாகப் பேணிவரும் பிரதேசமாகும். மாரி, காளி, திரௌபதை, கண்ணகை என்பன இங்குள்ள முக்கியமான பெண் பெரும் தெய்வங்களாகும். இந்து நாகரிகத்துறைசார் கல்வியியலாளர்கள் இவற்றைச் சிறு தெய்வங்கள் என்ற சிமிழுக்குள் அடைக்க எத்தனிப்பினும் மட்டக்களப்பு மக்களுக்கு இவையாவும் பெருந்தெய்வங்களே. தெய்வங்களுள் பெரும் தெய்வம் சிறுதெய்வம் என்ற பாகுபாட்டினை மானிடவியல் மாத்திரமின்றி ஆழமான ஆன்மீகம் கூட மறுக்கிறது, இப் பெண் பெரும் தெய்வங்கள் மத்தியில் கண்ணகையம்மன் வழிபாடு வைகாசி மாதத்தில் மட்டக்களப்பில் பெரும் தேசியச் சமய விழாவாகவே கொண்டாடப்படுகின்றது. மட்டக்களப்பின் பெரும்பாலான கிராமங்களெல்லாம் இக்கால கட்டத்தில் வேற்றுருக் கொண்டு காணப்படும்.
ஆரம்பத்தில் மூன்று கண்ணகை அம்மன் கோயில்களே இருந்தன என்பதை ஒரு பாடல் காட்டுகின்றது. (பொற்புறா வந்த காவியம்)
பின்னால் எட்டு கண்ணகையம்மன் கோயில்கள் இருந்தன என்பதை இன்னொரு பாடல் சுட்டுகிறது.(அங்கணாமைக் கடவை கண்ணகையம்மன் காவியம்)
அதன் பின்னர் ஒன்பது கண்ணகை அம்மன் ஆலயம் பற்றி இன்னொரு பாடல் கூறுகின்றது.
அதன்பின்னர் பதின்மூன்று கண்ணகை அம்மன் கோயில்கள் பற்றிக் கூறுகிறது. மற்றொரு பாடல் (கண்ணகை அம்மன் குளுர்த்திப் பாடல்), (வழக்குரை காவியம்)
பதினைந்து கண்ணகை அம்மன் ஆலயங்களில் வாழும் கண்ணகியை வேண்டுவதாக இன்னொரு பாடல் உள்ளது. (மழைக்காவியம்)
இன்று கிழக்கிலங்கையில் நாற்பத்தி ஏழு கண்ணகை அம்மன் கோயில்கள் இருப்பதாக தகவல் கிடைக்கின்றது. (மட்டக்களப்பில் ஆகமமுறை சார்ந்த ஆகம முறை சாராத வழிபாடு (M.Phil ஆய்வுக்கட்டுரைGunapalasingam)
ஏழிலிருந்து நாற்பத்தி ஏழு வரை என்பது கிழக்கிலங்கையில் கண்ணகை அம்மனுக்கிருக்கும் செல்வாக்கினைச் சுட்டி நிற்கின்றது.
19ம் நூற்றாண்டில் ஆறுமுகநாவலர் காலம் 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை காலம் வரை சமணச்சி என்றும் செட்டிச்சி என்று சைவமரபில் புறக்கணிப்பிற்குள்ளான கண்ணகை அம்மன் வழிபாடு ஏன் மட்டக்களப்பில் இத்தனை செல்வாக்குற்றது.?
மட்டக்களப்பினது சமூக அமைப்பின் பின்னணியா அல்லது கண்ணகி சிவனுடனும் பார்வதியுடன் இணைக்கப்பட்டுச் சைவமதத்தினுள் உள்வாங்கப்பட்டமையா?
இவை ஆய்வுக்குரியவை எனினும் சுவாமி விபுலானந்தர் காரைதீவுக் கண்ணகை அம்மன் பாரம்பரியத்தில் இருந்தே உருவானவர் என்பது மனதிலிருத்த வேண்டிய ஓர் செய்தியாகும்.
இக் கண்ணகை அம்மனை வழிபட எழுத்தில் அமைந்த இரண்டு ஆவணங்கள் மட்டக்களப்பில் உள்ளன.
ஒன்று பத்ததி
இன்னொன்று பாடல்கள்
, பத்ததியைச் சிலர் பத்தாசி என அழைப்பர்.
பத்தாசி என மக்கள் மத்தியில் வழங்கி வந்த இயல்பான சொல் பத்ததி என உயர் தன்மை பெற்றதோ என்பது ஆய்விற்குரியது.
கோயில் கிரியை செய்யும் முறைகளை ஒழுங்காக எழுத்துரைக்கும் ஆவணமே பத்ததி ஆகும்.
சைவத்திருக்கோயில் கிரியைகள் ஆக பத்ததி முறையில் நடத்தப்படுவது அனைவரும் அறிந்ததே.
இதேபோல அம்மன் கோயில் கிரியைகளுக்கும் ஆகம முறைபோன்ற பத்தாசி உண்டு. ஆகமமுறை சார்ந்த பத்ததியும் ஆகமமுறை சாராப் பத்ததியும் ஒன்றுபோலத் தோற்றமளிபினும், இரண்டிற்குமிடையே தனித்தனிப் பண்புகளும் தனித்துவங்களும் உள்ளன என்பதனை நாம் மனங்கொள்ளல் வேண்டும்.
பத்தாசிகள் அல்லது பத்ததிகள்
ஆரம்பத்தில் இப்பத்தாசிகள் அல்லது பத்ததிகள் வாய்மொழியாகப் போதிக்கப்பட்டு பின்னால் எழுத்து வடிவம் பெற்றிருக்கலாம். அம்மன் பத்ததிகள் ஆலய அமைப்பு, கும்பங்கள், நிவேதனப் பொருட்கள், அடையாளப் பொருட்கள், வாத்தியக் கருவிகள், வேண்டுதல் நிறைவேற்றும் முறைகள், கன்னிமார்பூசை, தெய்வமாடுதல், பூசைமுறைகள் என்பவற்றை விரிவாக எடுத்துக் கூறுவன. இவற்றைச் செய்பவர்கள் கப்புகன், கட்டாடி, பூசகர், குருக்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்.
கண்ணகை அம்மன் பத்ததி ஏனைய அம்மன் பத்ததிகளிலிருந்து வேறுபட்டது. கூனற் பலகை விதிமுறை இவ்வித்தியாசங்களுள் ஒன்று கண்ணகை அம்மனின் வரலாறு உரைத்த விதிமுறைகள் கூறுவது இது. கண்ணகி அம்மன் பத்ததி கண்ணகி அம்மனுக்குரிய வழிபாட்டு விதிமுறைகளைக் கூறுகின்றது.
கண்ணகை அம்மன் பத்ததியில்
1) கூனற் பத்ததி
2) குளக்கட்டுப் பத்ததி
3) கொம்புப் பத்ததி
4) கன்னிமார் பத்ததி
5) வேடப்பத்ததி
எனப் பல பத்ததிகள் வழக்கிலிருந்ததாகவும் அறிகிறோம்.
கதவு திறத்தில், படிகடத்தல், விளக்கு ஏற்றல், மடைவைத்தல், சிங்காசனம் வகுத்தல், சிங்காசனம் ஏற்றல், ஓமம் வளர்த்தல் எனப் பெருமளவு அடிப்படையில் இக் கண்ணகையம்மன் பத்ததிகளுக்கிடையே ஒற்றுமைகள் காணப்படினும் இடத்துக்கிடம் வேறுபட்டுக் காணப்படும் பொருளாதார அடித்தளம் இயற்கைச் சூழல் காரணமாகச் சிற்சில கிரியை முறைகளைச் சேர்த்தும் மாற்றியும் செய்ய முயன்றபோது வேறு வேறு பத்ததிகள் தோன்றியிருக்கலாம். குறிப்பிட்ட கோயிலிற் பின்பற்றப்படும் பத்ததியினை அக்கோயில் சார் சமூகத்துடனும் இடத்துடனும் சேர்த்துப் பார்க்கையில் இது பற்றி மேலும் தெளிவு பெறலாம். கண்ணகை அம்மனுக்குரிய வைகாசிப் பூரணை நாள் எதுவெனக் குறிக்கையிலும், மடைப்பெட்டி விடயத்திலும், கலியாணச் சடங்கு நடத்தும் முறையிலும், நாட்களிலும் வேறுபாடுகள் இருப்பதனை இப்பத்ததிகள் அனைத்தையும் ஒருங்கு சேர்த்துப் படிப்போர் அறிந்து கொள்வர்.
பத்தாசிகள் எனப்படும் இப்பத்ததிகளை ஆகமமுறைப் பத்ததிகளுடன் ஒப்பிட்டு நோக்கும் ஒரு பண்பும் பலரிடம் காணப்படுகின்றது. கீழ்வரும் ஒப்பீடு இதனைக் காட்டும்.
ஆகம முறை பத்தாசி அல்லது பத்ததி முறை
ஆவாகணம ............... தம்பனம்
ஆபரண பூசை ............... கொலு அடுக்குச் சார்த்தல்
ஓமம் வளர்த்த ............... அக்கினி பூசை
பரிவாத தெய்வம ............... காவல் காரர்
வாஸ்து சாந்தி ............... மண்டபம் காவல்
ஆசாரிய அபிடேகம் ............... படிகடத்தல்
ஆகம முறையுடன் ஒப்பிட்டு பத்ததிகளிடமும் அம்முறை உண்டு என்று பெருமை தேடுவதை விட பத்ததிகளைத் தனித்துவமுடையதாக நோக்கும் முறை பத்ததிகளை மேலும் புரிந்து கொள்ள எமக்கு உதவக்கூடும். பத்ததியில் அமைந்த இக்கிரியை நெறிகளை நடத்துபவர் கட்டாடியார் எனப்படுகின்றார்.
கப்புகன், (காரைதீவு) பூசாரியார், குருக்கள் எனவும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.
1) தாய்வழி உரிமையாகவும் (மாமனுக்குப் பிறகு மருமகன்)
2) சகோதரன் வழியாகவும் (தமையனுக்குப் பின் தம்பி)
3) உரித்துடையோர் முறையிலும்
4) பயிற்றுவிக்கப்படுவோர் முறையிலும்
மேற்சொன்ன பூசை நடத்துனர்கள் தெரிவு செய்யப்படுவர். மேற்குறிப்பிட்டபடி இறங்கு நிரைப்படி ஒன்றில்லாவிடில் அடுத்தது கருத்தில் எடுக்கப்படுகின்றது.
கட்டாடியின் தோற்றத்திற்கெனச் சில விதிமுறைகள் உண்டு. அவர்
உத்தரியம் அணிந்து
தலைப்பாகை கட்டி
ஏகாவடம் பூண்டு
இருக்க வேண்டும்.
இக்கரியை நெறிகளைப் பூரணமாகத் திறம்படச் செய்கின்ற பூசகர் கொண்ட கோயில்களுமுண்டு. இவற்றை அரைகுறையாக அறிந்து பூசை செய்கிற அரைகுறைப் பூசகர்களுமுண்டு.
சமஸ்கிருத மயமாக்கம் மிக வேகமாகப் பரவி அம்மன் கோயில்கள் யாவும் இராஜராஜேஸ்வரி கோயில்களாகவும் கோயில் நிருவாகம் எல்லாம் தேவஸ்தானமாகவும் கண்ணகை அம்மன் சடங்குகளெல்லாம் கண்ணகி உற்சவம் என்றும் மாறிவரும் இக்கால கட்டத்தில் பூசகர்களின் செயற்பாடுகளும் தோற்றமும் கூட சமஸ்கிருதமயமாகி வருவதனை இன்று கிழக்கிலங்கையில் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இப் பின்னணியில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள கண்ணகையம்மன் பத்ததிகள் யாவும் தொகுக்கப்படுதல் அவசியமாகும். இங்கு கன்னன்குடா கண்ணகை அம்மன் ஆலயத்தில் வழக்கிலுள்ள கூனற் பத்ததி அச்சில் முதன்முறையாகப் பிரசுரமாகிறது.
பத்ததி அகவலோடு ஆரம்பமாதல் மரபு. குறிப்பிட்ட தெய்வம் பற்றி கூறி அதன் வரலாறு கூறி அத்தெய்வத்திற்குரிய கிரியை முறை கூறி
இந்த விதியாலியற்றினார் பூசை
இந்திரன் போல இருந்து வாழ்வாரே.
என்று அகவல் முடியும். பின்னால் கிரியை முறைகளைப் பத்ததி விதிப்படி எடுத்து விளக்கும். இப்பத்ததியினுள் அகவல், குளுர்த்தி, வரலாறு என்பவற்றுடன் பஞ்சகாவியம் கூட்ட, கதவு திறக்க, படி கடக்க, விளக்குக்கு எண்ணெய் வார்க்க, திரியேற்ற, மடைகட்ட, முழுக்குப் பண்ண, சிங்காசனம் வகுக்கு, சிங்காசனம் ஏற்ற, அகோரமெழுப்ப, ஓமம் வளர்க்க, பால் வார்க்க, அமிர்தம் கொடுக்க, இன்னின்னவாறு செய்யவேண்டும், இதனிதற்கு இன்ன இன்ன மந்திரம் சொல்ல வேண்டும் என்று கூறிச் செல்கின்றது. இதில்வரும் மன்றாட்டு முக்கியமான ஒன்றாகும்.
ஆரம்பத்தில் மன்றாட்டமே பூசை முறையாக இருந்திருக்க வேண்டும். பின்னாளில் அதுவே கிரியை முறைகள் புகுத்தப்பட்டு விதியுடைய பத்ததியாக மாறியிருக்க வேண்டும். இப்பத்ததியில் கண்ணகை அம்மன் காளியுடனும் பார்வதியுடனும் ஏனைய தெய்வங்களுடனும் பெரும் தெய்வக் குடும்பத்துள் கொண்டுவரப்படுவதைக் காண்கிறோம். இவ்வரலாற்று வளர்ச்சியை அறிந்து கொள்ள இப்பத்ததி நமக்கு உதவுகின்றது.
கண்ணகை அம்மனுக்குரிய கிரியைகளோடு மக்களை கண்ணகை அம்மன் வழிபாட்டில் இணைத்துக்கொள்ள கண்ணகி பற்றிய பாடல்கள் உதவுகின்றன. கண்ணகை அம்மன் கோயிற் சடங்கு நாட்களில் கண்ணகி வழக்குரை படிக்கப்படுவது வழமை, கண்ணகையம்மன் கோயிலைப் பொறுத்தவரை ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது நாட்கள் சடங்குகள் நடைபெறும். அது ஊர்வசதியையும் பாரம்பரியத்தையும் பொறுத்தது. பெரும்பாலான ஊர்களில் ஐந்துநாட் சடங்கே நடைபெறும்.
முதலாம் சடங்கு தொடக்கம் இறுதி நாள் வரை கண்ணகை வழக்குரை பாடப்படும். கதவு திறத்தில் அன்றே இது ஆரம்பமாகும். கலியாணக்கால் சடங்கு நடக்கும் அன்று கலியாணக் கதை படிப்பு நடக்கும். பச்சைக்கட்டுச் சடங்கு அன்று அடைக்கல கதை பாடப்படும். வழக்குரை பாடுவது சடங்கின் ஒரு பகுதி. சடங்கு நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இதனைச் சுருக்கியும் விரித்தும் பாடுவர்.
சடங்கின் இறுதிநாள் குளுர்த்தி நடைபெறும். அம்மனின் கோபம் தணிவிக்க செய்யப்படும் சடங்கே குளுர்த்தி. குளுர்த்திப்பாடல் எளிமையும் இனிமையும் ஓசை ஒத்திசைவும் கொண்ட இனியபாடல்கள். உடுக்கொலியும் சிலம்பின் பின்னணியும் அதற்கு ஒரு தனியழகு தரும். குளுர்த்திப் பாடலின் முற்பகுதி கண்ணகை அம்மன் வரலாறு கூறுவதாகவும், பிற்பகுதி கோபம் ஆறக் குளிர்ந்தருளுமாறு வேண்டுவதாகவும் அமைந்திருக்கும்.
கண்ணகை அம்மன் அகவல் ஒவ்வொரு நாளும் பூசை முடிந்ததும் கட்டாடியாரால் பாடப்படும். இந்த அகவலைக் கட்டாடியார் மாத்திரமே பாடுவார். வேறு எவரும் பாடுவதில்லை, பாடலுக்குப் பின்னணியாக எந்த வாத்தியமும் பயன்படுத்தப்படுவதில்லை, அகவல் தவிர உடுக்குக் காவியம் என்ற ஒன்றும் சில கோயில்களில் பூசைக்குப் பிறகு பாடப்படும். இவை தவிர கண்ணகை அம்மன் பற்றிய பாடல்கள் பல பல்வேறு ஊர்ப்புலவர்களால் பல்வேறு காலங்களில் இயற்றப்பட்டுள்ளன.
கண்ணகை அம்மன் பாடல்கள்
கண்ணகை அம்மன் பாடல்கள் இரு பிரிவுக்குள் அடக்கலாம்.
(1) கண்ணகை அம்மன் பற்றிய பொதுவான பாடல்கள் ஒரு பிரிவு, இவற்றுள் குளுர்த்தி, கலியாணக்கால் வெட்டுதல், ஊர்சுற்றுக் காவியம், வழக்குரை காவியம், கண்ணகை அம்மன் அகவல், பிரார்த்தனை போன்றவை அடங்கும்.
(2) தனிப்பட்ட கண்ணகை அம்மன் கோயில்களுக்குரிய பாடல்கள் இன்னொரு பிரிவு இவற்றுள் பொற்ர்றா வந்த காவியம் அங்கணாமைக்கடவை கண்ணகி அம்மன் காவியம், பட்டிநகர்க் கண்ணகை அம்மன் மழைக்காவியம், கன்னன்குடா கண்ணகி அம்மன் காவியம் போன்றவை அடங்கும்.
இப்பாடல்கள் மூன்று வகையில் முக்கியமானவை.
(1) இப்பாடல்கள் மூலம் கிழக்கிலங்கைக்கும் கண்ணகை அம்மனுக்குமுள்ள உறவுகள் பற்றிய கிழக்கிலங்கை மக்களிடையே வழங்கிய தொன்மங்களை அறியமுடிகின்றது.
(2) சிலப்பதிகாரம் கூறும் கதையைவிட கிழக்கிலங்கை மக்களிடம் வழங்கப்படும் கண்ணகை அம்மன் கதை பற்றி வளர்ந்துவந்த தொன்மக் கதைகளை அறியமுடிகிறது.
(3) கண்ணகை அம்மன் இந்துமதத் தெய்வக் கூட்டங்களுடன் இணைக்கப்படுவது தெரியவருகிறது. அத்தோடு கண்ணகை அம்மன் சக்தியின் வடிவமாகவும் ஏனைய சக்தி வடிவங்களான பார்வதி துர்க்கை அவதாரமாகவும் காணப்படுவதனை அறியமுடிகின்றது.
(1) கிழக்கிலங்கை மக்களுக்கும் கண்ணகை அம்மனுக்குமுள்ள உறவுகள்
பொற்புறா வந்த காவியத்தில் பல தொன்மங்கள் உரைக்கப்படுகின்றன. நான் முன்னரே குறிப்பிட்டபடி தொன்மங்கள் கற்பனைக் கதைகளாயினும் அவை வரலாற்றுக் கூறு தொடர்பான செய்திகளையும் தருவன ஆகும். பொற்புறா வந்த காவியத்தில் கலியுக மூவாயிரம் முந்நூறில் வன்னியர்கள் ஆண்ட நாளில் இரண்டு சிற்றரசர்கள் இலங்கையை ஆண்டனர் என்றும், நாகமங்கலையென்ற அம்மன் பொற்புறாவாக இலங்கை வந்தாள் எனவும், அந்த பொற்புறாவைப் பிடிக்க மன்னன் ஏவலரை ஏவினான் எனவும், அவர்களால் அதனைப் பிடிக்க முடியாத போனபோது ஏழுகன்னியரை அனுப்பினால் தான் அவர்கள் கையில் தான் அகப்படுவதாக மன்னன் கனவில் நாகமங்கலையம்மன் உரைத்தாள் எனவும் ஏழுகன்னியரையும் அலங்கரித்து மன்னன் வாவிக்கரையனுப்ப அவர்கள் அங்கு நின்றபோது ஒரு கன்னியின் கரத்தில் பொற்புறாவின் ஓர் இறகு வந்து வீழ்ந்ததெனவும் அதனை மன்னனிடம் அவர்கள் கொடுக்க அவன் நாகமங்கலை அம்மனுக்குக் கோயில் அமைப்பித்தான் எனவும் பின் இலங்கை நகர் முழுவதும் கண்ணகை அம்மன் சிலை கொண்டு செல்லப்பட்டு தம்பிலுவிவுலுக்கு கொண்டு வரப்பட்டதென்றும் தம்பிலுவிலில் மழுவரசன் வகுத்துவாரில் வந்த மங்கலப்போடி என்பவன் பூசகராக நியமிக்கப்பட்டான் என்றும் பின் இறக்காம நகரில் கங்குடாவெளியெனும் இடத்தில் அம்மன் கோயில் கொண்டாளெனவும் அம்மனின் ஆக்ஞைப்படி மடை வைப்பும் பூசைகளும் நடைபெற்றன என்றும் பின்னர் பட்டிமேடுக்கு அவள் சென்றாள் எனவுமான பல விடயங்கள் கூறப்படுகின்றன.
கிழக்கிலங்கையில் கண்ணகை அம்மன் நிலைபெற்றுப் பரவியதையும் அதன் ஆரம்பத்தையும் இக்காவியம் கூறுகிறது.
கஜபாகு மன்னன் மூலம் இலங்கை வந்த பத்தினி வழிபாடு இலங்கையின் பல பாகங்களுக்கும் பரவியது என்பதும் வரலாற்றும் செய்தி. பொற்புறா வந்த காவியம் கூறும் தொன்மத்தில் பல கற்பனைக் கதைகள் காணப்படுகிறதாயினும் வரலாற்றுக் கூறுகள் பல இருப்பதும் அவதானித்தற்குரியது. ஆய்வாளருக்குரிய அரிய செய்திகள் இக்காவியத்தில் உள்ளன என்பதுதான் நான் இங்கு கூறவிழைவது.
(2) சிலப்பதிகாரக் கதையிலிருந்து விலகும் இடங்கள்
கண்ணகி வழக்குரையில் உரைக்கப்பட்ட பல தொன்மக்கதைகள் கண்ணகை அம்மன் வழக்குரை காவியத்தில் சுருக்கமாகக் கூறப்படுகின்றன. வழக்குரை காவியத்திலிருந்து கண்ணகி வழக்குரை பெருநூல் எழுந்ததா? அல்லது கண்ணகி வழக்குரை பெருங்காவியத்தில் சுருக்க வடிவம்தான் கண்ணகி வழக்குரை காவியமா? என்பன ஆய்வாளர் கவனத்திற்குக் கொணர்கிறேன்.
சிவனும் உமையும் கைலையில் இருக்கையில் பாண்டிய மன்னனுக்கும் நெற்றிக்கண் இருப்பதாக உமை கூற, அதை அழிக்க அருகிலிருநத நாகமங்கலை எனும் அணங்கை அவர்களனுப்ப அவள் மாங்கனி வடிவில் மாறன் (பாண்டியன்) அரண்மனைக்குவர, அவன் நெற்றிக்கண் மறைந்தது எனவும், மாங்கனியை அவன் ஒரு பொற்பேழையில் வைக்க மறுநாள் அது பிள்ளையாக மாறியிருந்ததென்றும், அப்பிள்ளையால் பாண்டியநாடு கெட்டிடுமென கணிதர் கூற அவன் அக் குழந்தையைப் பொன்னாற் செய்த பெட்டகத்தினுள் வைத்து வைகை ஆற்றில் விட்டான் என்றும், ஆற்றில் மிதந்து கடலுக்குள் வந்த அப்பேழையை மாசாத்துவான் எனும் பெருவணிகன் கண்டு அக் குழந்தையை எடுத்து கண்ணகி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான் எனவும், அவளுக்குத் திருமணம் செய்வதற்கு நாகமணி பதித்த சிலம்பு அவசியம் எனக் கண்ட மாசாத்துவான் மீகாமனிடம் கூற அவன் வெடியரசனை வென்று நாக நாடு சென்று நாகமணி கொணர்ந்து கொடுக்க அதனை வைத்து சிலம்பு செய்து கண்ணகைக்கு அணிவித்தார் எனவும், சிலப்பதிகாரத்தில் வராத பல செய்திகள் வழக்குரை காவியத்தில் கூறப்படுகின்றன. இத் தொன்மங்கள் பழையனவா? பின்னால் சேர்க்கப்பட்டவையா? என்பது ஆய்விற்குரியது பழையவையாவின் இளங்கோவடிகள் ஏன் சிலப்பதிகாரத்தில் இதனைத் தவிர்த்தார் என்பதும் ஆய்விற்குரியது.
மாதவியே ஊர்வசி என்பதும், கோவலன் வாசித்த யாழ் நாரதர் என்பதும், மாதவி பெற்ற தலைக்கோல் இந்திரன் மகன் சயந்தன் என்பதும், சாபத்தால் இவர்கள் பூமியில் பிறந்து கண்ணகை வாழ்வுடன் இணைந்தனர் என்பதுமான தொன்மங்களும் இவ்வழக்குரை காவியத்தில் இடம்பெறுகின்றன. கண்ணகி சேரநாடு சென்று தெய்வீகமுற்ற கதை இங்கு உரைக்கப்படாமை கவனிப்பிற்குரியது.
சிலப்பதிகாரத்தில் வஞ்சிக்காண்டம் இளங்கோவடிகளால் பாடப்படவில்லை என்ற கதையும் இங்கு கவனித்தற்குரியது. இடையர்சேரியையும் ஏழை மக்களையும் கண்ணகை அம்மனையும் இறுகப்பிணைக்கும் வரிகள் பாடல்களில் இழையோடுகின்றன. எல்லா இடமும் எரிபரவ வைத்த கண்ணகை திருகி எறிந்த முலைப்புண்ணில் வெண்ணெய் அள்ளித் சேரிப்பெண்கள் தப்ப மனதாறி அச்சேரிமக்கள் அம்மானை ஆடி அரும்பூசனை செய்ய மனம் மகிழ்ந்தாள் எனவும் இப்பாடல்கள் கூறுகின்றன. இவ்வகையில் மன்னர்கள் உயர்ந்தவர்கள் தெய்வமாக அன்றி மக்கள் தெய்வமாக கண்ணகை அம்மன் கட்டமைக்கப்படுகின்றது.
பிராமணரும் பசுக்களும் பெண்டிரும் அழியக்கூடாது என இளங்கோவடிகள் எழுதிவைக்க இப்பாடல்கள் பாடிய புலவர்களோ :
எச்சேரி வெந்தாலும் இடைச்சேரி வேகாமல்
பச்சேரி வெந்தாலும் பறைச்சேரி வேகாமல் இருக்கப் பாடுகிறார்கள்
அல்லற்பட்டு அழுத அடக்கப்பட்ட மக்களுக்கு கண்ணகை அம்மனை ஆறுதல் தரும் தெய்வமாக்குகிறார்கள்.
கண்ணகி கண்ணகை அம்மனாக கண்ணகி அம்மாளாச்சியாக மாறிய கதையினை இப்பாடல்களைக் கட்டுடைத்து அறியலாம். மட்டக்களப்பில் அமைக்கப்பட்ட மூன்று கண்ணகை அம்மன் தலங்கள் 47 ஆக மாறியமைக்கான காரணங்களுள் ஒன்று இங்கே காணப்படுகின்றது.
(3) கண்ணகை அம்மன் இந்துத் தெய்வக் கூட்டத்துடனும் சக்தி வடிவமாகவும் பார்வதியுடனும் இணைக்கப்பட்டமை
நாகமங்கலை அணங்குதான் கண்ணகை என்பதும் அவ்வணங்கு கைலையில் சிவனுடனும் பார்வதியுடனும் அருகில் இருந்தவள் என்பதும் சிவனால் தெரிவு செய்யப்பட்ட ஒருத்தி என்பதும் சைவசமயத்திற்குள் கண்ணகியை இணைக்கும் ஒரு முயற்சி ஆகும்.
கண்ணகை அம்மன் அகவலில் கண்ணகைக்கு
எண்ணரிய பச்சை நிறத்தி
வாக்குவீரி வயிரவி
கூளி கணங்களுடனாடுகின்ற காளி
நளிநிறுமாணி நடனமிடும் பேச்சி
ஆதி அனாமி அபிராமி அம்பிகை
எனப் போற்றப்படுகிறாள்.
இங்கு பார்வதி, காளி, அபிராமி, முதலாம் இந்துத் தெய்வங்களுடன் கண்ணகை அம்மனை இணைக்கும் போக்கு தென்படுகின்றது.
இளங்கோவடிகள் சமணர் என்பதம் கண்ணகியைச் சமணச்சி என்பதுமான ஒரு கருத்தும் உண்டு. இதனாலேயே ஆறுமுகநாவலர் போன்றோர் கண்ணகி வழிபாட்டை சைவ வழிபாட்டுக்குள் சேர்க்கவில்லை.
கஜபாகு கொணர்ந்த பத்தினியும் இந்துமதம் சார்ந்வளாயில்லை. ஆனால் கிழக்கிலங்கைக்கு வந்த கண்ணகையம்மன் கிழக்கிலங்கை இந்துப் பண்பாட்டினுள் இணைந்து விடுவதனைக் காணுகிறோம்.
கண்ணகி வழக்குரையும் கண்ணகை அம்மன் பாடல்களும் நாட்டார் இலக்கியமன்று, அவை உயர் இலக்கியமரபின. உயர் இலக்கிய மரபுக்கும் சமஸ்கிருதமயமாக்கத்திற்குமான உறவுகள் ஏலவே ஏனையோரால் கூறப்பட்டுள்ளன. கண்ணகை அம்மன் சேரி மக்கள் தெய்வ நிலையினின்றும் உயர் மக்கள் தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டபோது இத்தகைய சமஸ்கிருதமயமாக்கங்கள் நடைபெற்றிருக்கக் கூடும். கண்ணகை அம்மன் கோயில்கள் மூன்றாக இருந்து மிக அதிகமாக வளர்ந்தமைக் குரித்தான காரணங்களுள் ஒன்றாக இதனையும் கொள்ளலாம்.
கிழக்கிலங்கையில் வழக்கிலுள்ள கண்ணகை அம்மன் வழிபாட்டின் பன்முகக் கூறுகள் இதனை நிரூபிக்கும். கிழக்கிலங்கையில் 03 நிலைகளில் கண்ணகை அம்மன் வழிபாடுகள் நடைபெறுகின்றன.
(1) பத்தினி வழிபாடு
பாலம்பட்டாறு போன்ற இடம் வரையுள்ள கண்ணகை அம்மன் வழிபாடும் வேடர் மத்தியிலுள்ள பத்தினி அம்மன் வழிபாடும்.
(2) கண்ணகை அம்மன் வழிபாடு
மட்டக்களப்பில் கிராமிய மக்களிடம் வழக்கிலுள்ள வழக்குரையுடனும் குளுர்த்தியுடனும் இணைந்த கண்ணகை வழிபாடு.
(3) சமஸ்கிருத மயமாக்கத்திற்குள்ளாகி ஆகம நெறிக்குட்பட்ட கண்ணகை அம்மன் வழிபாடு
காரைதீவு கண்ணகை அம்மன் கோயிலும் இன்று மாறிவரும் சிலகோயில்களும்.
சமணத் தெய்வமான கண்ணகி மக்கள் தெய்வமாக மாறியது ஒரு வளர்ச்சி நிலை என்றால் வரலாற்றுப் போக்கில் மக்கள் தெய்வமான கண்ணகி உயர் தன்மை பெற்று ஆகம முறைக்குள் வரும் தெய்வமாக மாறுவது இன்னொரு நிலை எனலாம். கண்ணகை அம்மன் பத்ததிகளையும் பிராமண பூசை நடக்கும் இன்றைய கண்ணகை அம்மன் கோயில் வழிபாட்டு முறைகளையும் ஒப்பிட்டு ஆராயும் போது இவை பற்றித் தீவிரமான தெளிவுகள் கிடைக்க வாய்ப்புண்டு.
கிழக்கிலங்கையின் வரலாற்றையும் சமூகத்தையும் கல்வெட்டுக்களிலும் புதைபொருள் ஆவணங்களிலும் தேடுவது ஒருபுறமாக மறுபுறம் இங்கு வழங்கும் நாட்டார் மரபுகளிலும் கோயில் வழிபாடுகளிலும் தெய்வப் பிரிவுகளிலும் கலைகளிலும் (முக்கியமாக கூத்து வசந்தன் மகிடி பறைமேளம்) தேடவேண்டும். இவற்றுள் மட்டக்களப்பில் உள்ள கோயில் பிரிவுகள் முக்கியமானவையாகும். மட்டக்களப்பின் கோயில்களை தேசத்துக் கோயில்கள் ஊர்க்கோயில்கள் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அரசர் அல்லது தலைவர் நிவந்தங்கள் பெற்றதும் பல சமூகங்கள் இணைந்து நடத்துவதுமாக தேசத்துக் கோயில்கள் அமைய ஊரில் வாழும் தனி ஒரு சமூகமே நடத்துவதாக ஊர்க்கோயில்கள் அமையும். தேசத்துக் கோயில்களுக்கும் சமூக அமைப்புக்கும் வரலாற்றக்குமிடையே தொடர்புகள் உண்டு. ஊரில் வழமைகளுக்கும் ஊர்க்கோயில்களுக்கமிடையே தொடர்புகளுண்டு.
கிழக்கிலங்கையின் கோயில்களை மையமாக வைத்து அக்கோயில் நிருவாக வழிபாட்டு அமைப்புக்களை எத்தகையதொரு சமூகம் தோற்றுவித்துள்ளது என்பது பற்றிய ஆராய்வும் அவசியம். கிழக்கிலங்கையின் கண்ணகை அம்மன் கோயில்கள் ஊர்க்கோயில்கள் என்ற அமைப்பினுள் அடங்குமாயின் சில கண்ணகை அம்மன் கோயில்கள் பல ஊர்களும் சேர்ந்து சடங்கு இயற்றும் பண்பு கொண்டவையாயுள்ளன. இவை தேசத்துக் கோயில்களாக மாறும் இடயல்புடையன. கண்ணகை அம்மன் வழிபாட்டிலும் ஆலய அமைப்பு முறைகளிலும் சமஸ்கிருதமயமாக்கம் மெல்லப் பரவி வருகின்றது. இன்னொரு அம்சம் கண்ணகி வழிபாடு பல படித்திறங்களில் நடைபெறுவது இன்னொரு அம்சமாகும்.
மட்டக்களப்புச் சமூகத்தின் அரசயில் சமூக பண்பாட்டு உருவாக்கத்தினைக் கண்ணகை அம்மன் கோயில் வழிபாடு அவ்வழிபாடு வளர்ந்த முறைமை அவ்வழிபாட்டுக்காகப் படைக்கப்பட்ட இலக்கியங்கள் என்பவற்றைப் புதிய ஆய்வு நெறிகளுக்கமைய கற்பதன் மூலம் புரிந்துகொள்ள முடியும்.
கிழக்கிலங்கையினது இலக்கியப் பாரம்பரியம்
கிழக்கிலங்கையினது இலக்கியப் பாரம்பரித்தை வாய்மொழி இலக்கியப் பாரம்பரியத்துள் அடக்கி விடுவது பொதுவான ஒரு மரபாக இருந்து வருகிறது. ஈழத்து இலக்கிய வரலாறு எழுதும் பலர் பழைய செந்நெறி இலக்கியங்களைப் பற்றி குறிப்பிடுமிடத்து கிழக்கிலங்கையின் இலக்கியங்கள் அதிக இடம்பெறுவதில்லை. கிழக்கிலங்கையின் இலக்கிய மரபு வாய்மொழி இலக்கியமரபே என்ற பாரம்பரிய கருத்தோட்டத்தின் செல்வாக்கிற்குட்பட்டு இவர்கள் இருப்பதுடன் கிழக்கிலங்கையில் தோன்றிய செந்நெறி இலக்கியங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்காமையும் ஒரு காரணம் எனாலாம்.
கிழக்கிலங்கைக்கென ஒரு நீண்ட இலக்கிய மரபு உண்டென்பதையும் அது யாழ்ப்பாண இலக்கிய மரபுடன் ஒரேவேளை இணைந்தும் வேறாகவும் வளர்ந்து வந்துள்ளது என்பதையும் கிழக்கிலங்கை இலக்கியங்களை நுணுகி ஆராய்வோர் அறிவர். கிழக்கிலங்கை இலக்கிய மரபை வாய்மொழி இலக்கிய மரபு, செந்நெறி இலக்கிய மரபு வாய்மொழிக்கும் செந்நெறிக்கும் இடைப்பட்டதொரு பொதுமரபு என மூவகைக்குள் அடக்கலாம்.
வாய்மொழியாகப் பாடல்களை இட்டுக் கட்டிப்பாடும் மரபு இன்றும் கிழக்கிலங்கையில் வழக்கிலுண்டு. கிழக்கிலங்கையில் 'கவி' எனப்படும் பாடல் வகை இதனுள் அடங்கும். இது தமிழர் முஸ்லீம்கள் மத்தியில் வழங்கி வரும் ஒரு மரபாகும்.
கண்ணகி வழக்குரை, பாரத அம்மானை, கம்சன் அம்மானை, இசுவா அம்மானை, இராமர் அம்மானை போன்ற நூல்கள் கிழக்கிலங்கையில் ஒரு செந்நெறி இலக்கியப் பாரம்பரியம் இருந்தமைக்கான சான்றுகளாகும். கண்ணகை அம்மன் பற்றி பாடல்களிலும் ஒரு செந்றெநித்தன்மை இருப்பதனை அவதானிக்க முடியும்.
கிழக்கிலங்கையில் ஆடப்படும் கூத்து நூல்கள் ஊர்க்கோயிற் சடங்குகளில் பாடப்படும் காவியம், வசந்தன் பாடல், சிந்து தாலாட்டு முதலான பாடல்கள், மட்டக்களப்பு மான்மியம், மட்டக்களப்பு பூர்வீக சரித்திரம் என்பன செந்நெறிக்கும்(உடயளளiஉயட) வாய்மொழி நெறிக்கும் (ழசயட) இடைப்பட்ட நூல்கள் எனலாம்.
இவற்றை ழசயவரசந என அழைப்பர்,அதாவது செந்நெறிக்கும்( உடயளளiஉயட) வாய்மொழிக்கும் (ழசயட) க்கும் இடைப்பட்ட பொதுநெறி (ழசயவரசந)
இப்பொது நெறியின் அம்சம் யாதெனில் அது கல்வி கேள்விகளிற் புலமை பெற்ற கற்றோரையும் ஈர்க்கும் கல்வி கேள்விகளிற் புலமையற்றவரான சாதாரண மக்களையும் ஈர்க்கும். இலக்கியத்தினை சனமயப்படுத்தும் இப்பண்புடைய இலக்கிய மரபே கிழக்கிலங்கையின் பிரதான இலக்கிய மரபு போலத் தெரிகின்றது.
இப்பின்னணியிலே கண்ணகை அம்மன் பற்றிய பாடல்களையும் நாம் நோக்க வேண்டும். மகாபாரத இலக்கியம் இராமாயண இலக்கியம் போல கண்ணகை அம்மன் இலக்கியம் என ஒன்றை நாம் கிழக்கிலங்கைப் பகுதிகளிளே காணமுடியும். கண்ணகி வழக்குரை குளுர்த்திப் பாடல்கள் மழைக்காவியம் என்பவற்றுடன் கண்ணகை அம்மன் பற்றிய காவியம் சிந்து அகவல் பிரார்த்தனை போன்றவற்றையும் கண்ணகை அம்மன் பத்ததிகளையுமு; இணைத்து கண்ணகை அம்மன் இலக்கியம் என ஒன்றைப் பற்றி நாம் சிந்திக்கலாம்.
கண்ணகை அம்மன் பற்றி கிழக்கிலங்கையில் வழங்கும் வாய்மொழிக் கதைகளையும் கண்ணகை அம்மன் கோயில்கள் சம்பந்தமான கதைகளையும் திரட்டுவதுடன் தமிழ்நாட்டு கோயில் கண்ணகை கதை மரபுகளுடன் இவற்றை இணைத்து ஆராயலாம். தென்கிழக்காசிய நாடுகளிலும் இவ்வழிபாடு பரவியுள்ள முறை பற்றியும் நோக்கலாம். அத்தகைய ஓர் ஆய்வு முயற்சியைத் தூண்டுவதாகவும் இத் தொகுப்பு அமைந்துள்ளது.
ஓசையையும் ஒத்திசையையும்
கண்ணகை அம்மன் பாடல்களில் காணப்படும் ஓசை நயமும் ஒத்திசை நயமும் சொல் நயமும் கவிதை அழகும் தனியாக ஆராயப்பட வேண்டியவை. மக்களுக்கு கண்ணகை அம்மன் கதைகளை எடுத்துக் கூறுவதே இப்பாடல்களின் பிரதான நோக்கமாயமையினும் கண்ணகை அம்மன் கோயில்கள் சிலவற்றில் உடுக்கடி சிலம்போசை, பறைமுழக்கம் என்பனவற்றிற்கு அமைய மாந்தர் தெய்வமுற்று ஆடிய வழிபாடு நடத்தும் முறைகள் இருப்பதனாலும் இப்பாடல்கள் ஓசையையும் ஒத்திசையையும் பெற்றனவாக உருவாக்கப்பட்டள்ளன.
வீசு கர மேகநிற வேதநுத லாள் கருணை
மேவு மத வாரண விநாயக விநோதா
என்று குளுர்த்திப்பாடல் ஆரம்பமாவதுடனே ஓசையும் ஒத்திசையும் ஓடிவந்து பாடல்களில் உட்கார்ந்து கொள்ளுகின்றன. இராமாயணம் எழுதிய கம்பர் 96 விருத்த ஓசை வகைகளைக் கையாண்டார் என்பர். இங்கு பெயர் தெரியாத புலவர்கள பல்வேறு வகையான ஓசை வகைகளை கையாண்டிருப்பதனை இப்பாடல்களைப் படிப்போர் அறிவர். காப்புக்கு ஓர் ஓசை எனின் கண்ணகையின் தோற்றத்திற்கு இன்னுமோர் ஓசை, கண்ணகை அம்மன் கோபத்துடன் மதுரை வீதிகளில் வருவதற்கு ஓர் ஓசை எனின் அவளைக் குளிரப்பண்ண மற்றுமோர் ஓசை, வழிபட இன்னுமோர் ஓசை எனப் பல்வேறு ஓசை நயங்களை கண்ணகை அம்மன் குளுர்த்திப் பாடல்களிலே காணலாம்.
பல்வேறு ஓசை ஒத்திசை நயங்கள் கண்ணகை அம்மன் பாடல்களைத் தொட்ட இடங்களிலெல்லாம் மணக்கின்றன. அருணகரிநாதரின் திருப்புகழ் ஓசை நயத்தினை ஒத்தவையாக இவை அமைந்திருக்கின்றன.
சொல் நயங்கள்
பாடல்களின் சொல் நயங்களும் எம்மை வசீகரிக்கின்றன. உதாரணத்திற்கு கண்ணகியை ஓரிடத்தில் அறிமுகப்படுத்தும் ஆசிரியர் 'கந்தம் செறிந்த கனங்குழலாள்' என்ற சொற்களைக் கையாளுகிறார். கந்தம் - வாசைன, வாசைன நிறைந்த குழல். குழல் என்பது தலைமயிர். சிறிய தலைமயிர் அன்று அது கனம் குழல் அடர்த்தியும் நிறமும் கொண்ட தலைமுடி அது. கந்தம் செறிந்த கனம் குழல் என்ற சொற்தொடர் பெரியதொரு படிமத்தை எம்முன் நிறுத்துகிறது. அழகாபாரம் கலைந்து தொங்க கண்ணகை கைச்சிலம்பு ஏந்திச் செல்லும் ஓவியத்திற்கான கற்பனை இங்குதான் உருவாகி இருக்க வேண்டும். இன்னொரு இடத்தில்
வாளை எடுத்து வளமுலையைத் தானரிந்து
தோளாடையாகத் துணிந்தாய் குளிர்ந்தருள்வாய்
என வருகின்றது.
இங்கு கண்ணகை அம்மன் வாளால் தன் முலை அரிந்து இரத்தம் வழிய வெற்று வேலுடன் அவள் நிற்கும் காட்சியினை தோளாடையாக என்ற சொல் உணர்த்தி நிற்கின்றது. தோள் ஆடையாக இருந்தாலென்ன தோல் ஆடையாக இருந்தாலென்ன கண்ணகியின் தோற்றத்தினைச் சொற்களுக்குள் சிறைப்பிடிக்கிறார் கவிஞர். இவ் வண்ணம் இப்பாடல்களின் சொல்நயம் இரசித்தற்குரியது.
மட்டக்களப்பில் இதுவரை வெளிவராத மந்திர ஏடுகள் வாகட ஏடுகள் கோயில் பத்ததிகள் என்பன எழுத்தில் கொணரப்பட வேண்டும். இவற்றை வைத்திருக்கும் பலர் தருவதில்லை. பத்ததிகள் மந்திரங்கள் என்பன மறை பொருளானவை. அவை வெளியே தெரியக் கூடாது என்பதுதான் பலரதும் கொள்கை. தன் பிற்சந்ததிக்குக் கூடக் கொடுக்காமல் மறைத்து வைத்தமையால் ஓலைப்பெட்டிக்குள் இருந்து உக்கிப்போன வைத்திய வாகட ஏடுகள் மட்டக்களப்பில் மிக அனந்தம்.
மறைபொருள் என்பதற்கு இன்று பெரிய அர்த்தம் இருப்பதாத் தெரியவில்லை. மறை என அழைக்கப்பட்ட வேதநூல்கள் பதிப்பில் வந்து விட்டன.
பெரும்பணி காத்துக் கிடக்கின்றது
இருக்கு, யசுர், சாம வேதங்கள் அண்மையில் முழுமையாகப் பெரிய அளவில் தமிழில் கூட வெளியாகி விட்டன. பிராமணோத்தவரும், சமஸ்கிருத விற்பனர்களுமே அறியமுடியும் என்ற நிலையிலிருந்து இன்று சாதாரண மனிதரும் படித்தறியும் நிலைக்கு மறைகள் எனக் கூறப்பட்ட வேதங்களே வந்துவிட்டன.
நம்முன்னும் பெரும்பணி காத்துக் கிடக்கின்றது. ;.
படத்திலுள்ளவை
1.அம்மன் முகக்களை
2.கண்ணகி அம்மன் கோவிலின்
பூசனைபொருட்களுள் முக்கியமான
சிலம்பும் அம்மனைக் காயும்
3. .அம்மன் சிலை(கோராவளி)
4..குளுர்த்தி ஏடு பாடுவோர் (கோராவளி)
5..அம்மனுக்குரிய வேப்பிலை







