மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் மரணமான பெண் ஒருவரது சடலத்தினை மீள எடுத்து சரியான முறையில் பிரேத பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எல்.எம்.அப்துல்லா நேற்று வெள்ளிக்கிழமை மாலை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி வயிற்று வலியால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 17ஆம் திகதி சத்திர சிகிச்சையின் பின் மரணமான மட்டக்களப்பு, கல்லடித் தெரு, ஜேசுதாசன் கோல்டன் பெஞ்சமின் சாந்தி (வயது 42) என்பவரது சடலத்தினையே மயானத்திலிருந்து மீள எடுத்து பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவ் உத்தரவினை அடுத்து மட்டக்களப்பு கள்ளியன்காடு சேமக்காலைக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 23ஆம் திகதி சடலம் தோண்டி எடுக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் விடுத்த உத்தரவுக்கமைய மட்டக்களப்பு பெருங்குற்றப்பிரிவால் பி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
தமது மனைவிகள் மரணமானமை தொடர்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர்கள் இருவருக்கெதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பைச் சேர்ந்த ஜேசுதாசன் கோல்டன் பெஞ்சமின், ஆர்.கிங்ஸ்லி பிரசாத் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன் அடிப்படையில், விசாரணைகளை நடத்துமாறு குற்றப் புலனாய்வுப்பிரிவு தலைமையகம் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவித்திருந்தார்.
இக் கடிதங்கள், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, குற்றப் புலனாய்வுப்பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர், கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண முதலமைச்சர், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழு ஆகியோருக்கு அனுப்பியிருந்தனர்.
இந்தக் கடிதத்துக்கு அமைவாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காமினி மத்துகோரள மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு விசாரணை நடத்துமாறு பணித்திருந்தார்.
அதேநேரம், இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சு, மகளிர் விவகார அமைச்சர், திஸ்ஸ கரலியத்த, கிழக்கு மாகாண முதலமைச்சர், முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எம்.அமீர் அலி ஆகியோர் சுகாதார அமைச்சுக்கும் கடிதங்களை அனுப்பி வைத்திருந்தனர்.
இவர்களில் கல்லடித் தெரு, ஜேசுதாசன் கோல்டன் பெஞ்சமினின் மனைவியான மட்டக்களப்பு புனித மரியாள் பேராலய கத்தோலிக்க மறை ஆசிரியராகக் கடமையாற்றி வந்த சாந்தியின் (வயது 42) மரணம் தொடர்பிலேயே அவரது சடலத்தை மீள எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
