களுவாஞ்சிகுடியில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு பிணை

அவுஸ்ரேலியாவுக்கு சட்ட விரோதமாக செல்லமுற்பட்ட நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட 23 பேரில் 21பேர் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை அவுஸ்ரேலியாவுக்கு சட்ட விரோதமாக செல்ல முற்பட்டபோது இராணுவத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் நேற்று களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது கைதுசெய்யப்பட்ட 21பேரை இரண்டு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி றயாழ் அனுமதியளித்தார்.

கைதுசெய்யப்பட்டவர்களில் வென்னப்புவ பகுதியை சேர்ந்த இருவர் தொடர்பிலான வேறு வழக்கு வென்னப்புவ பகுதியில் இருப்பதன் காரணமாக இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி கைதுசெய்யப்பட்டவர்கள் விடுதலைசெய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய இருவரும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேநேரம் சட்ட விரோதமான முறையில் வெளிநாடு அனுப்புவதற்கான முகவர்களாக செயற்பட்டவர்கள் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச்.சுஜத் பிரியந்த தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஒன்பது பேர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள்.14பேர் தமிழர்கள் எனவும் கைதுசெய்யப்பட்டவர்களின் ஐந்து வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.