குறுகிய நேரத்தில் கடும் மழை : திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட சாத்தியம் - நீர்ப்பாசன திணைக்களம்


குறுகிய காலப்பகுதியில் அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாவதன் காரணமாகத் திடீர் வெள்ளப்பெருக்கு நிலைமைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், பொதுமக்கள் அனைவரும் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக ஆற்றோரங்கள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களும், வீதிப் பயணங்களை மேற்கொள்பவர்களும் தங்களது பிரதேசங்களில் பதிவாகும் மழைவீழ்ச்சி குறித்துத் தொடர்ந்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அத்திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர், பொறியியலாளர் எல்.எஸ். சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று புதன்கிழமை (11)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் நாட்களிலும் கணிசமான அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், நீர்ப்பாசன திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அது தொடர்பான அரச நிறுவனங்கள் அவ்வப்போது வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை உன்னிப்பாகக் கவனித்துச் செயற்படுமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்று  செவ்வாய்க்கிழமை (10) காலை முதல் இன்று  புதன்கிழமை 11) காலை வரை 24 மணி நேரத்தில் நாட்டில் அதிகபட்சமாக அம்பாறை மாவட்டத்தில் சுமார் 130 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார். அத்துடன் காலி, மாத்தறை மாவட்டங்களின் கிங்கங்கை மற்றும் நில்வளா கங்கை வடிநிலப் பகுதிகள், களுகங்கை மற்றும் களனி கங்கை பாயும் இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்கள், அத்துடன் கேகாலை, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளிலும் 50 முதல் 100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இலங்கையின் ஏனைய பெரும்பாலான பகுதிகளில் சாதாரண மழைவீழ்ச்சி கிடைத்துள்ள போதிலும், இன்றைய தினமும் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் பிரதான ஆறுகளின் தற்போதைய நீர்மட்டம் குறித்து விளக்கிய அவர், நில்வளா கங்கையின் கீழ் பகுதிகளான அக்குரஸ்ஸ, மாலிம்பட மற்றும் கத்துவ போன்ற இடங்களில் நீர்மட்டம் கிரமமாகக் குறைந்து வருகின்ற போதிலும் தற்போதும் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு காணப்படுகிறது. கிங்கங்கையின் பத்தேகம மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு நிலை காணப்பட்டாலும் மேல் பகுதிகளில் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருகின்றது. களுகங்கையின் மில்லகந்த மற்றும் குடாகங்கை பகுதிகளை அண்மித்துச் சிறிய வெள்ளப்பெருக்கு நிலை காணப்படுவதுடன், களுத்துறையை அண்மித்த சில இடங்களில் நீர்மட்டம் சற்று அதிகரித்திருந்தாலும் பாரிய வெள்ளப்பெருக்கு நிலை வரை அது வளர்ச்சியடையவில்லை. அதேபோல் களனி கங்கை மற்றும் அத்தலுகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் உயர் மட்டத்தில் காணப்பட்ட போதிலும் தற்போது குறைந்து வருகிறது. மகா ஓயாவின் படல்கம பகுதியில் சாதாரண நீர்மட்ட அதிகரிப்பு காணப்பட்ட போதிலும் அது வெள்ளப்பெருக்கு மட்டத்தை எட்டவில்லை எனவும்இ மகாவலி கங்கையின் நாவலப்பிட்டி மற்றும் பேராதனை நீர்மட்டங்கள் ஆபத்தான நிலையில் இல்லை.

இருப்பினும், நேற்று செவ்வாய்க்கிழமை (10) அம்பாறை மாவட்டத்தில் வெறும் இரண்டு மணித்தியாலங்கள் போன்ற மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் 130 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியது. இக்காலப்பகுதியில் மிகக் குறுகிய நேரத்தில் பெய்யும் கடுமையான மழையே திடீர் வெள்ளப்பெருக்குக்கு பிரதான காரணமாக அமைகின்றது என அவர் எச்சரித்தார்.

எனவே, ஆறுகளுக்கு அருகிலும் தாழ்நிலப் பிரதேசங்களிலும் வசிக்கும் மக்களும், வீதிகளைப் பயன்படுத்துவோரும் தங்களது பிரதேசங்களில் கிடைக்கும் மழைவீழ்ச்சி தொடர்பில் தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறும், சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் வெளியிடும் பாதுகாப்பு அறிவிப்புகளைத் தீவிரமாகக் பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.