வவுனியாவில் உயிருக்குப் போராடிய காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: உடற்கூற்று பரிசோதனைக்கு ஏற்பாடு!


வவுனியா, ஆறுமுத்தான்புதுக்குளம் பகுதியில் படுகாயமடைந்த நிலையில் கண்டறியப்பட்டு, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

முன்னதாக, கிராமவாசிகளால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குறித்த யானையை மீட்டுத் தீவிர மருத்துவச் சிகிச்சைகளைத் தொடர்ச்சியாக வழங்கி வந்தனர்.

யானையின் உடல்நிலை தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு வந்த நிலையிலேயே தற்போது சிகிச்சை பலனின்றி அது உயிரிழந்துள்ளது.

யானை உயிரிழந்தமைக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிவதற்காக வனஜீவராசிகள் திணைக்களத்தின் கால்நடை மருத்துவக் குழுவினரால் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

அண்மைய நாட்களாக வவுனியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது.

கடந்த 4ஆம் திகதி நெடுங்கேணி, பெரியமடுப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது மற்றொரு யானை காயமடைந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.