மட்டக்களப்பில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!


வங்காள விரிகுடா கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள தாழ்வு நிலை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கடலோரப் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள கடும் கடல் பெருக்கு மற்றும் கொந்தளிப்பான நிலையினால்  ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை மற்றும் இடைவிடாத சிறிய அளவிலான மழை வீழ்ச்சியால், கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுகின்றது.

 வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகளை அடுத்து, மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் வாழும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் தமது அன்றாட மீன்பிடித் தொழில்களுக்குச் செல்வதை முழுமையாகத் தவிர்த்துள்ளனர்.

குறிப்பாக, கல்லடி, திருச்செந்தூர், நாவலடி, வாழைச்சேனை, களுவாஞ்சிகுடி மற்றும் கல்லாறு உள்ளிட்ட கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், தமது மீன்பிடிப் படகுகள் மற்றும் வலைகளை கடல் அரிப்பு மற்றும் அலைகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தி வைத்துள்ளனர்.

 இந்நிலையினால் நாளாந்த கூலித்தொழிலை நம்பியுள்ள மீனவக் குடும்பங்களின் பொருளாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதுடன், வானிலை சீரடையும் வரை மீனவர்கள் அனைவரும் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்களம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.