கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் அதேநேரம் மனங்களிலும் தூய்மையான எண்ணங்களும் ஏற்படும்- கந்தசாமி பிரபு தெரிவிப்பு


இனரீதியாக மொழி ரீதியாக நாங்கள் பிரிந்து நின்றதுபோதும்.நாங்கள் ஒன்றிணைந்த இலங்கையர் என்ற தொனிக்குள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அழைப்பு விடுத்துள்ளார்.

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின்'தூய்மையான இலங்கை - அத்தம' தேசிய திட்டத்தின்கீழ்,மட்டக்களப்பு மாவட்ட பிரதான நிகழ்வு கூழாவடியில் நடைபெற்றது.

இதன்கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பிரதான வீதியில் விசேட வடிகான் சுத்திகரிப்பு வேலைத்திட்டம் நடைபெற்றது.

இவ்வேலைத்திட்டம் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கந்தசாமி பிரபு அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இந்நடவடிக்கையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த்,புனானை 23 வது படைப்பிரிவின் படைப்பிரிவு தளபதி, மட்டக்களப்பு இலங்கை விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி, மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் நா. தனஞ்செயன் உட்பட பலர் கலந்துகொண்டர்.

இதன்போது நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான நிலையில் நீண்டகாலமாக தூய்மைப்படுத்தப்படாமல் இருந்த கூழாவடி பிரதான வீதியின் வடிகான்கள் தூய்மைப்படுத்தப்பட்டன.

இந்த நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்கள்,பொது மக்கள்,அரச உத்தியோகத்தர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு சிரமதான பணிகளை முன்னெடுத்தனர்.

இந்த திட்டத்தின் ஊடாக சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் அதேநேரம் மனங்களிலும் தூய்மையான எண்ணங்களை ஏற்படுத்தும் என நம்புவதாக இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.